

ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இன்று 73-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு வாழ்த்துகளுடன் அவரைச் சந்தித்தோம்.
‘‘நான் பிறந்தது 23 ஆகஸ்ட் 1942ல். ஆனால் என் அப்பா பள்ளிக்கூடத்தில் என்னைச் சேர்ப்பதற்காக 17-7-1941 என்று என் பிறந்தநாளை மாற்றிக் கூறிவிட்டார். சான்றிதழ்களில் என் பிறந்தநாள் 17-7-1941 என்று இருப்பதால், அனைவருமே அதுதான் என் பிறந்த நாள் என்று நினைக்கிறார்கள். மக்களை குழப்ப வேண்டாம் என்றுதான் நான் இதுவரை என் நிஜ பிறந்தநாளை சொல்லவில்லை’’ என்று பேசத் தொடங்கினார் பாரதிராஜா.
இயக்குநர் பாரதிராஜா தற்போது நடிகர் பாரதிராஜாவாக விருதுகளெல்லாம் வாங்கத் தொடங்கிவிட்டாரே?
50 ஆண்டுகளுக்கு முன்பே நான் நடிகன்தான். நடிப்பு என்பது வேறு, இயக்கம் என்பது வேறு. இயக்குவதற்கு கொஞ்சம் ஞானம் வேண்டும். இயக்குநர் சொல்வதை அப்படியே உள்வாங்கிச் செய்பவன்தான் நடிகன். சுசீந்திரன் சொன்னதற்காக ‘பாண்டிய நாடு’ படத்தில் நான் நடித்தேன். இந்த படத்துக்காக கிடைத்த பெருமைகள் எல்லாம் எனக்கல்ல, சுசீந்திரனுக்குதான். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் பெரிய விருப்பத்தோடு பண்ணவில்லை. என்னை விருப்பத்தோடு நடிக்கவைத்து ஒரு நடிகனாக அழகு பார்த்தது சுசீந்திரன்தான்.
இயக்குநர் பாரதிராஜாவை மீண்டும் எப்போது பார்க்கலாம்?
விரைவில் பார்க்கலாம். லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றிய படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். வயதான ஒருவனுக்கும், ஒரு சிறு குழந்தைக்கும் இடையேயான பிணைப்பைச் சொல்லும் படம் இது. இதன் படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடைபெற வுள்ளது. இந்தப்படத்தை இயக்குவதுடன் நான் நடிக்கவும் செய்கிறேன். அந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
பழைய படங்கள் ரீமேக்காகி வரும் இந்த காலகட்டத்தில், உங்கள் படங்கள் எதுவும் ரீமேக் ஆகவில்லையே?
ரீமேக்கில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யலாம். அதே மொழியில் ரீமேக் செய்வது தேவையில்லாதது. ‘16 வயதினிலே’ படத்தை இப்போது ரீமேக் செய்தால், யாரால் செய்ய முடியும்? கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இன்னொருவர் மாற்றி எழுத முடியுமா? ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரு முறைதான் எழுத முடியும். அதனுடைய தொடர்ச்சியை வேண்டுமானால் பண்ணலாம்.
எனக்கும் அப்படி ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் தொடர்ச்சியை எடுக்க யோசனை இருக்கிறது. ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை இந்தக் காலகட்டத்தில் உள்ள ஒரு பையன் பார்த்தால் என்ன செய்வான் என்பதை ஒரு கதையாக உருவாக்கியுள்ளேன். அநேகமாக அந்தப் படத்தை மனோஜ் இயக்குவான். அதேபோல் ‘என் உயிர் தோழன்’ படத்தின் தொடர்ச்சியையும் எடுக்கும் எண்ணம் இருக்கிறது.
நீங்கள் இயக்கிய படங்களில், உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் எது?
அதை சொல்ல முடியாது. நான் இப்போது என் எல்லாப் படங்களையும் பார்க்கிறேன். ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரமாதமாக பண்ணியிருக்கிறேன். எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ‘காதல் ஓவியம்’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ இப்படி எல்லாப் படங்களையும் பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு தூரம் பண்ணியிருக்கி றோமா என்று தோன்றுகிறது.
என்னுடைய படங்கள் தோல்வியடைவது என்பது வேறு. ஆனால் அதில் என்னுடைய உணர்வுகள் குறையவில்லை. ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படம்கூட மோசமான படம் அல்ல. திடீரென்று ட்ரெண்ட் மாறியதால், அதில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. ‘பொம்மலாட்டம்’ படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் பண்ணியிருப்பேன். அதை இப்போது பேசுகிறார்கள். வியாபார யுக்தியில் நான் தோற்று இருக்கலாம். அதேநேரத்தில் இப்போது வரை நான் என்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன்.
தொடர்ச்சியாக 5 வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தீர்கள். ஆனால், இப்போது ஒரு படம் வெற்றியடைந்தாலே இயக்குநர்கள் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்களே?
கேட்பவர்களை தப்புசொல்லக் கூடாது. ‘நான் உங்களுக்கு தேவைப்பட்டால் எனக்கு இவ்வளவு கொடுங்க’ என்று கேட்கிறான். அவனுடைய விஷயத்தில் அது சரி. இவங்களும் காரணம் இல்லாமல் போவார்களா? 5 கோடி கேட்டால்கூட படம் எடுங்கன்னு ஏன் சொல்றீங்க? இவனால் இவ்வளவு வரும் என்று நினைச்சுதானே போறீங்க! அதனால் கேட்பதில் தவறில்லை.
ரஜினி, கமலை வைத்து ‘16 வயதினிலே’ படம் இயக்கினீர்கள். தற்போது ரஜினி, கமலை ஒன்றிணைத்து உங்களால் படம் பண்ண முடியுமா?
படம் பண்ண மாட்டேன். ஏனென்றால் அவர்களுக்கு தனித்தனி இமேஜ் வந்துவிட்டது. இப்போது கமல் வேறு, ரஜினி வேறு, பாரதிராஜா வேறு. அவர்களை வைத்து நான் படம் செய்தாலும் இது பாரதிராஜா படமா, ரஜினி படமா, கமல் படமா என்ற கேள்வி எழும். எனக்காக ரஜினி வளைய முடியாது, ரஜினிக்காக நான் வளைய முடியாது. அதேபோல எனக்காக கமல் வளைய முடியாது, கமலுக்காக நான் வளைய முடியாது.
தற்போது காமெடி படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைவதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதை இந்தக் காலகட்டத்திற்கான தேவை என்றுதான் சொல்வேன். பாரதிராஜாவின் கிராமத்து படங்கள் வந்தவுடனே, எல்லாரும் கிராமத்து படங்களை எடுத்தார்கள். மணிரத்னம் வந்தவுடன் ஒரு மாற்றம் வந்தது. இப்போது வேறு ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் ராம்விலாஸ் உடுப்பி ஹோட்டல்தான் பிரபலமாக இருந்தது. அதற்கு பிறகு முனியாண்டி விலாஸ் பிரபலமானது. இப்போது கே.எஃப்சி, மெக்டொனால்ட் போன்ற உணவகங்கள் பிரபலமாக இருக்கிறது. அதுபோல்தான் சினிமாவும்; இதுவும் மாறும்.
குறும்பட இயக்குநர்கள் நிறையப் பேர் தமிழ் சினிமாவிற்கு வந்து விட்டார்களே?
நல்லதுதான். முன்பு வாய்ப்புக்காக ஃபைலை தூக்கிக் கொண்டு அலைந்தார்கள். இப்போது குறும்படத்தை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். அதில் தவறு ஒன்றும் கிடையாது.
உங்கள் படங்களில் கிராமம் சார்ந்த கதைகள் அதிகமாக இருந்ததற்கு என்ன காரணம்?
அமெரிக்கா, லண்டன் என்று போனாலும் அரிசி சோறு சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியாது. 3 வயசு வரைக்கும் அம்மாவிடம் பால் குடிச்சு வளர்கிறீர்கள். அதற்கு பிறகு அம்மா ஊட்டுற சோறு, குழம்பு. 20 வயதில் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அவ ஒரு குழம்பு வைப்பா, அதை ‘எங்கம்மா வைத்த மாதிரியே இல்லை’ என்று சொல்வீர்கள். 18 வயதுவரைக்கும் உங்களை எது பாதிக்கிறதோ, அதுதான் திரையில் வரும். என்னுடைய 20 வயதுவரை என்னை பாதித்தது கிராமமும், கிராம சூழலும்தான். அதைத்தான் அதிகமாக பிரதிபலித்தேன்.
தற்போது கிராமம் சார்ந்த படங்களின் வருகை குறைந்து விட்டதே?
அந்தக் காலகட்டங்களுக்கு கிராமத்து படங்கள் ஓ.கே. இன்றைக்கு டி.வியெல்லாம் வந்துவிட்டது. எல்லா கிராமமும் ஒரு மினி சென்னையாகி விட்டது. சென்னையின் நாகரிகம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்போதெல்லாம் கிராமங்களில் மண் ரோடு கிடையாது, சிமெண்ட் ரோடுதான். கூரை வீடுகளே கிடையாது. ஆகவே, கிராமம் சார்ந்த படங்களை இனி ரசிக்க முடியாது. என்னுடைய பழைய படங்களையெல்லாம் கிராமங்களுக்கான பதிவு மாதிரி சொல்லலாம். இனியெல்லாம் அது முடியாது.
நீங்கள் இயக்குநராக வேண்டும் என்று சென்னை வந்தபோது, இவ்வளவு பெரிய இயக்குநராக வலம் வருவோம் என்று எதிர்பார்த்தீர்களா?
ஜோசியம் பார்த்தா இங்கு வர முடியும்? நம்பிக்கைதான். நம்பிக்கைதான் எனக்கு எப்போதுமே அடிப்படை. உறுதியும், நம்பிக்கையும், உத்வேகமும் இருந்தால் போதும். போக வேண்டிய இடத்தை முடிவு செய்து பயணம் செய்ய ஆரம்பித்தால் கண்டிப்பாக போய்விடலாம். போவோமா இல்லயா என்று நினைத்தால் முடியாது. நம்பிக்கையோடு இருந்தேன், வந்துவிட்டேன்.