

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார். பிரச்சாரத்தின் நடுவே நான் சென்னை சென்றிருந்தபோது, என்னை நேரில் சந்தித்த அவர், ‘தி கோட்’ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். இன்று விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்துதான் நான் யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லியிருப்பார்? ‘செந்தூரப் பாண்டி’ என்ற படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப்பெரிய பாசம் உண்டு.
எத்தனையோ இயக்குநர்கள் காத்திருந்தபோதும் 17 படங்கள் விஜயகாந்தை வைத்து எஸ்ஏசி இயக்கி இருக்கிறார். அதனால் எப்போதும் அவர் மீது விஜயகாந்துக்கு மரியாதை உண்டு. எனவே இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டனை மீண்டும் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும்போது, அவர் இடத்தில் இருந்து நான் யோசிக்கிறேன்.
விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார். விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். வெங்கட் பிரபுவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து இளையராஜா குடும்பத்துடன் நான் பழகி இருக்கிறேன். உனக்கும் விஜய்க்கும் என்னால் ‘நோ’ சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்” இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
விஜய் நடிக்கும் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.