

'அஞ்சான்' என்ற பெயரைக் குறிப்பிடாமல் அப்படத்தைப் பற்றி பிக் எஃப்.எம் வர்ணனையாளர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் கருத்துப் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
யு.டிவி நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'சேட்டை' படத்திற்கு பிக் எஃப்.எம்மில் விமர்சனம் செய்யும்போது, அப்படத்தை வெகுவாக கிண்டல் செய்தார் பாலாஜி. இதனால் யு.டிவி நிறுவனத்திற்கும், பாலாஜிக்கும் மோதல் ஏற்பட்டது. அவருக்கு மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அப்போதைய தகவல்.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி தனது பட விமர்சன நிகழ்ச்சியை எஃப்.எம்மில் இருந்து நிறுத்தினார். அதற்கு, "நான் ஒரு சாதாரண மனிதன். தினமும் வேலைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு சந்தோஷமாக செல்ல வேண்டும் என்று நினைப்பவன். ஒரு சில நபர்களுக்கு, முதிர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை வரும் வரை இனிமேல் படங்களை விமர்சனம் செய்யப் போவதில்லை. '120 ரூபாய் நிகழ்ச்சி' இனிமேல் இருக்காது" என்று விளக்கம் அளித்திருந்தார் பாலாஜி.
இந்நிலையில், தற்போது திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் 'அஞ்சான்' படம் வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. குறிப்பாக, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கற்பனைச் சிறகை விரித்து, இப்படத்தை 'கலாய்த்து' வருகிறார்கள்.
இத்தகைய விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "நல்ல விமர்சனங்களைக் கேட்டு வருகிறேன். என் வாயை அடைச்சுட்டேளே... ஊர் வாயை..?" என்று ட்வீட் செய்தார்.
அந்த ட்வீட்டை 600-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்து, பாலாஜியின் ட்விட்டர் பக்கத்தை சென்னை அளவில் ட்ரெண்ட்டாக வழிவகுத்தனர். பாலாஜியின் கருத்துக்கு சிம்பு, தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
"உண்மையை இன்றைக்கு மறைக்கலாம்.. என்றைக்கும் மறைக்க முடியாது" என்று சிம்பு, பாலாஜி கூறிய கருத்திற்கு ட்விட்டரில் பதில் அளித்தார்.
சிம்புவின் கருத்திற்கு பாலாஜி "உங்களிடம் இருந்து இந்த மாதிரியான கருத்து வருவது புதிதல்ல. சிம்பு மட்டுமே அவரது படத்தை நான் விமர்சனம் பண்ணியதை ரீ-ட்வீட் செய்தார்" என்று கூறினார்.
உடனே சிம்பு, "நான் எப்போதும் உனக்காக இருப்பேன். யாருக்காகவும் உன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டாம். நீ நீயாகவே இரு. கடவுளைத் தவிர மற்ற யாருக்கும் வளைந்து கொடுக்காதே" என்று அறிவுறுத்தினார்.
பாலாஜியின் சினிமா விமர்சனத்தால் கவர்ந்த ரசிகர்கள், ஆன்லைனில் அஞ்சானுக்கு எதிராக 'அர்ச்சனை' செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.