

அபுதாபியில் விமானப் பணிப்பெண் வேலையைத் துறந்துவிட்டு தமிழ்ப்படங்களில் நாயகியாக நடிப்பதற்கு பறந்து வந்திருக்கிறார் அஞ்சனா கீர்தி. ‘அந்தாதி’, ‘அழகிய பாண்டிபுரம்’, ‘திறந்திடு சீசே’ என்று அடுத்தடுத்து பல படங்களில் நாயகியாக நடித்துவருகிற இவர் அப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே மேலும் பல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். கோலிவுட்டில் பரபரப்பாக சுழன்று வரும் அஞ்சனாவை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.
விமானப் பணிப்பெண் வேலையில் இருந்து எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?
என் அப்பா எடிட்டர் ரவி. மலையாளத்தில் நிறைய படங்கள் செய்திருக்கிறார். குறிப்பாக ஆர்ட் பிலிம் என்றால் அப்பாவுக்கு உயிர். சின்ன வயதிலேயே இதை எல்லாம் பார்த்து பார்த்து வளர்ந்த என் மனது சினிமாதான் என் எதிர்காலம் என்று சொன்னது. வீட்டில் என்னை சினிமா பக்கம் விடவே இல்லை.
இந்த நேரத்தில் நான் ஃபேஷன் டிசைனிங்தான் படித்தேன். எதேச்சையாக கலந்துகொண்ட இண்டர்வியூ தான் அந்த ஏர் ஹோஸ்டஸ் வேலையை வாங்கிக்கொடுத்தது. இரண்டு ஆண்டுகள் துபாயில் இருந்தேன். ஆனாலும் சினிமா ஆசை என்னை விடவில்லை. சினிமா ஆர்வத்தில் என் புகைப்படங்களை ஆல்பமாக்கி நிறைய சினிமாகம்பெனிகளுக்கு அனுப்பினேன். அதன் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனே விமானப் பணிப்பெண் வேலையை விட்டு பறந்து வந்தேன். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டில் அனுமதி வாங்கி சினிமாவுக்கு வந்தேன். முதலில் ‘கானகம்’ என்கிற ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்து இப்போ
மூன்று படங்கள் முடித்து விட்டேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
முன்னணி ஹீரோக்களின் படங்களில் இன்னும் நடிக்கவில்லையே?
இப்போதைக்கு கதையில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். அதுக்காக பெரிய ஹீரோக்களுடன் நடிக்கப்போவதில்லை என்றில்லை. நல்ல கதைக் களம் கொண்ட படங்களில் நடிக்கும்போது என் மீது தனிக் கவனம் ஏற்படும். அதுவே, அடுத்தகட்டத்துக்கு என்னை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.
மலையாளியான நீங்கள் தமிழ்ப் படங்களை தேர்வு செய்ய என்ன காரணம்?
பூர்வீகம் மலையாளமாக இருந்தாலும், எனக்கு சென்னைதான் எல்லாம். முதலில் தமிழ்ப்படங்களில் ஒரு இடத்தை பிடித்த பிறகே மற்ற மொழிப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
எந்த மாதிரியான கதாபாத்திரங்களை நீங்கள் விரும்பு கிறீர்கள்?
ஒரு படத்தில் நடித்த கதாபாத்திரம் மற்றொரு படத்தில் இல்லாமல் இருந்தால் போதும். அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் என் மூன்று படங்களும் எனக்கு அப்படித்தான் அமைந்துள்ளன.
திரைப்படங்களில் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?
அப்படிச் சொல்ல முடியாது. நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் வந்த ‘அனாமிகா’ படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தானே உள்ளது? இப்படியான படங்கள் தெலுங்கில் அதிகம் வருகின்றன. தமிழிலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.
பொழுதுபோக்கு?
பாட்டு பாடுவது, ஓவியம் வரைவது, வீட்டில் பூனைக்குட்டிகளோடு விளையாடுவது என்று ஓய்வு நேரங்களில் என் பொழுது இனிமையாக கரைகிறது.
உங்கள் எதிர்கால கணவன் எப்படி இருக்கவேண்டும்?
என்னை புரிந்துகொள்பவராக இருக்கவேண்டும். எனக்கு அழகு முக்கியமில்லை. நல்ல பர்சனாலிடியோடு என் கனவுகளுக்கு உருவம் கொடுப்பவராக இருக்கவேண்டும்.