

சென்னை: இயக்குநர் ஹரியின் மூத்த மகன் ஸ்ரீராம் ‘ஹம்’ (HUM) என்ற படம் மூலம் இயக்குநராகி இருக்கிறார். சுமார் 1 மணி நேரம் ஓடும் இந்தப் படம் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகராகவும் ஸ்ரீராம் அறிமுகமாகி இருக்கிறார். சஞ்சய் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் கார்மெலஸ் இசையமைத்து உள்ளார்.
இந்தப் படம் பற்றி ஸ்ரீராம் ஹரி கூறியதாவது: சில குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். கொஞ்சம் பெரிய படம் பண்ணலாம் என்று நினைத்து உருவாக்கியதுதான் ‘ஹம்’. இது என்ன ஜானர் படம் என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்களின் மனநிலையை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் இது. என் சித்தி, ஸ்ரீதேவி விஜயகுமார் மருத்துவராக இதில் நடித்திருக்கிறார். அவரிடம் ஐடியாவாக சொன்னேன். நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தை முடித்துவிட்டு எங்கள் குடும்பத்துக்கு திரையிட்டுக் காண்பித்தேன். ஒவ்வொருவரின் எக்ஸ்பிரஷன்களில் இருந்து நான் புரிந்துகொண்டேன்.
அப்பா (ஹரி), சில ஷாட்கள் பற்றி கருத்து சொன்னார். அடுத்து என் படங்களில் அப்பா படங்களின் சாயல் இருக்குமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. யூடியூப்பில் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.
இவ்வாறு ஸ்ரீராம் ஹரி கூறினார்.