

சென்னை: பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம், ‘இரவின் கண்கள்’. டோலி ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார். கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரதாப் என்டர்பிரைசஸ் சார்பில் பிரதாப் தயாரித்துள்ளார். கீதா கரண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சார்லஸ் தனா இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதையை பாலசுப்ரமணியம் கே எழுதியுள்ளார்.
வரும் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி, பாப் சுரேஷ் கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்சன் கதையான இதில், அலெக்ஸா போன்ற ஐரிஸ் என்ற கருவி முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. கொலைக் குற்றத்தில் இருந்து மீண்டு வரத் தெரியாமல் முழிக்கும் ஹீரோவுக்கு அந்தக் கொலையை மறைக்க வழிகாட்டுகிறது ஐரிஸ். ஆனால் அது அவனை காப்பாற்றியதா, இல்லையா என்று கதை போகும்.
ஹீரோ கதாபாத்திரம் எதிர்மறை சாயல் கொண்டது. மற்றவர்கள் நடிக்கத் தயங்குவார்கள் என்பதால் நானே நடித்தேன். மலையாளப் படங்களைப் போல இந்தப் படமும் யதார்த்தமாக இருக்கும்” என்றார்.