“பணம், பதவி, பவர்... ஜெயில்!” - அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ டீசர் எப்படி? 

“பணம், பதவி, பவர்... ஜெயில்!” - அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ டீசர் எப்படி? 
Updated on
1 min read

சென்னை: அமீர் நாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் எப்படி? - கொலை வழக்கில் அமீர் சிறை செல்ல வேண்டிய காட்சியுடன் டீசர் தொடங்குகிறது. போராட்டங்கள் வெடிக்கின்றன. அமீரின் இன்ட்ரோ மாஸாக உள்ளது. “பணம், பதவி, பவர் இந்த 3 எழுத்தையும் அனுபவிச்சது மாதிரி, ஜெயிலுங்குற 3 எழுத்தையும் அனுபவிச்சா தானே முழு அரசியல்வாதி” என அவரது குரல் ஒலிக்க ‘மக்கள் போராளி’ அமீர் என்ற டைட்டில் கார்டு காட்டபடுகிறது.

‘உங்க அரசியல் வாழ்க்க முடிஞ்சதா?’ என பத்திரிகையாளர்கள் கேட்க, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்று அமீர் கூறியதும் டீசர் முடிகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in