

தனுஷ், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது 'வேலையில்லா பட்டதாரி'. இப்படம் வெளியான தினத்திலிருந்து பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
தனுஷ் புகை பிடிப்பது போல் வெளியான விளம்பர போஸ்டர் குறித்து முதலில் சர்ச்சை எழுந்தது. மாநில சுகாதாரத்துறையிடம் தமிழக புகையிலை கட்டுப்பாட்டு இயக்கம் புகார் செய்தது.
'இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும். போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டது.
இந்த 'புகை'ப்பட போஸ்டர் பிரச்சினை அடங்கும் முன், திரைப்படத்தில் தனுஷ் பேசும் ஒரு வசனம் குறித்து ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வசனத்திற்கு எதிர்ப்பு அதிகரித்ததால், அதன் தொடர்ச்சியாக தனுஷ் கைதானார் என்று தகவல்கள் இன்று பரவலாக உலவத் துவங்கின.
இது குறித்து தனுஷ் தரப்பில் கேட்டபோது, “நடிகர் தனுஷ் கைது என்று தகவல் பரவுகிறது. இது தவறான தகவல். வதந்தி.. தனுஷ் சென்னையில், தனது வீட்டில் ஓய்வெடுக்கிறார்” என அறிவிக்கப்பட்டது.