Published : 27 Mar 2024 09:19 AM
Last Updated : 27 Mar 2024 09:19 AM

கரோனா காலகட்டத்தில் தேடி தேடிச் சென்று உதவிய சேஷு

சென்னை: பிரபல காமெடி நடிகர், லட்சுமி நாராயணன் என்ற சேஷு. விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமானவர் இவர். இதையடுத்து, வீராப்பு, ஐந்தாம் படை, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாரிஸ் ஜெயராஜ், ஏ1, டிக்கிலோனா, திரவுபதி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும், ‘அச்சச்சோ அவரா, பயங்கரமானவராச்சே? அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் புகழ்பெற்றது.

கடைசியாக, சந்தானம் நடித்த ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் நடித்திருந்தார். கோயில் பூசாரியாக நடித்திருந்த இவர் வரும் காட்சிகள் பாராட்டப்பட்டன. அவர் பரதநாட்டியம் ஆடும் காட்சியும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்த சேஷுவுக்கு கடந்த 15-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 60. மறைந்த சேஷுவுக்கு மனைவி, அபிலாஷ், அனிருத், பரத் ஆகிய மகன்கள் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

நடிகர் சேஷு மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சேஷு உதவும் குணம் கொண்டவர். சுமார் 10 ஏழை பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் என்றும் கரோனா காலகட்டத்தில் தேடி தேடிச் சென்று உதவி செய்தார் என்றும் அவர் நண்பர்கள் கூறுகின்றனர்.

வாசிக்க > ‘லொள்ளு சபா’ சேஷு - திரையில் அட்டகாச நடிகர், நிஜத்தில் அற்புத மனிதர் | புகழஞ்சலி பகிர்வு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x