"இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை" - கமல்ஹாசன் உறுதி

"இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை" - கமல்ஹாசன் உறுதி
Updated on
1 min read

அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பதால் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அரசியலில் தோற்றால் தொடர்ந்து தான் நேர்மையாக வாழ்க்கையை நடத்த எதாவது செய்வேன் என்றும், ஆனால் நான் தோற்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். ,

"இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. அதைத் தவிர இனி நான் படங்களில் நடிக்கப்போவதில்லை. நாம் பெரிய அரசியல் ஆளுமையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் 37 வருடங்களாக சமுதாயத்திற்கு சேவை செய்து வருகிறோம். இந்த 37 வருடங்களில் 10 லட்சம் விசுவாசமான தொண்டர்களைப் பெற்றுள்ளோம். எனது அறிவுறுத்தலின் பேரில் பல இளைஞர்களை எங்கள் நற்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார்கள். அதில் 250 வழக்கறிஞர்களும் அடங்கும். அனைவரும் தன்னார்வலர்களாக மாறுவார்கள்.

நான் முழு ஈடுபாடோடு இருக்கிறேன். எனது வங்கிக் கணக்கை மேம்படுத்திக் கொள்ள நான் அரசியலுக்கு வரவில்லை. என்னால் ஒரு பிரபலமாக, மகிழ்ச்சியாக, ஓய்வெடுத்துக் கொண்டு வாழ முடியும். ஆனால் வெறும் நடிகனாக மட்டும் வாழ்ந்து மறைந்து விடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தேன். மக்கள் சேவையில் தான் என் வாழ்க்கை முடியும் என எனக்கு நானே உறுதி பூண்டுள்ளேன்.

அரசியலுக்கு வரும் எண்ணம் 10-12 வருடங்களுக்கு முன்பே வந்தது. ஆனால் நான் தீர்மானமாக இல்லை. என்னால் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டு, கோப்பப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அரசியலுக்கு வராமல் நான் நினைக்கும் சீர்திருத்தத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முடியாது. முதல்வர் ஆக வேண்டும் என்பது என் கனவல்ல. மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே என் கனவு" என்று கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

சக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "நான் எனது கட்சி பற்றியும், கொள்கைகள் பற்றியும் அறிவிக்க வேண்டும். பிறகு ரஜினிகாந்த் அறிவிக்கவேண்டும். பிறகு எங்களுக்குள் கூட்டணி சரிபடுமா என்று பார்க்கலாம்" என்று கூறினார்.

பிப்ரவரி 21ஆம் தேதியன்று கமல்ஹாசன் தனது கட்சி மற்றும் கொள்கைகளைப் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in