Last Updated : 22 Mar, 2024 07:00 PM

 

Published : 22 Mar 2024 07:00 PM
Last Updated : 22 Mar 2024 07:00 PM

ரெபல் Review - வன்மம், ஹீரோயிசம், உண்மைச் சம்பவம் ‘தாக்கம்’ தந்ததா?

வர்க்க பாகுபாடுகளுக்கு எதிரான செங்கொடி பறக்கும் கேரள மண்ணின் மூணாறு பகுதியில் குறைந்த கூலி, அதீத வேலையில் உழன்று தவிக்கின்றனர் தமிழர்கள் சிலர். இந்தத் துயரிலிருந்து விடுபட கல்வியை ஆயுதமாக கருதும் அவர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ்), பாண்டி (வினோத்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்டோருக்கு பாலக்காட்டில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கிறது.

அங்கு அவர்கள் தமிழர்கள் என்பதாலேயே மலையாள மாணவர்களால் ஒடுக்கப்படுகின்றனர். ராகிங் என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தப்படுகிறது. இதனிடையே, கல்லூரியில் மாணவர் தேர்தல் அறிவிக்கப்பட, மலையாள மாணவர்களுக்கு எதிராக தேர்தலில் களமிறங்குகினறனர் தமிழக மாணவர்கள். பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும் அவர்களின் முன்னெடுப்புதான் திரைக்கதை.

80-களில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியிருப்பதாக கூறப்படும் இப்படம் மலையாளிகளால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் பேசுகிறது. மூணாறு தோட்டத் தொழிலாளர்களின் வலி, தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், அதையொட்டிய கலவரம், இனப் பாகுபாடு, மலையாளிகளின் ஆதிக்கம் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நிகேஷ்.

தமிழன் வாழ வைப்பான், தமிழன் கண்டுபிடித்ததுதான் வேஷ்டியும் - சேலையும், இது தமிழர் அடையாளம், தமிழர்கள் என்றால் கேவலமா? தமிழ் மொழியிலிருந்து பிரிந்தது தான் மற்ற தென்னிந்திய மொழிகள், தமிழனாக பிறந்தது தவறா என ஏகப்பட்ட ‘தமிழர்’ பெருமை பேசும் வசனங்களும், அதற்கு எதிராக ஒட்டுமொத்த மலையாளிகளையும் பொதுவாக குற்றம் சாட்டி காட்சிப்படுத்தியிருப்பது ஆபத்தான ‘இன வெறுப்பு’. இதனாலேயே படம் ஒரு கட்டத்தில் பிரசாரத் தொனிக்கு மாறிவிடுகிறது.

உண்மைக் கதையின் ஆவணப்படுத்தல் தொடக்கத்தில் நேர்த்தியாக இருந்தாலும், அது மெல்ல மெல்ல நகர்ந்து 'ஹீரோ’யிசத்துக்குள் சிக்கிக் கொள்வதால் யதார்த்தம் உணரப்படவில்லை. புரட்சிகர நாயகனால் மட்டுமே எல்லா விஷயங்கள் செய்து முடிக்கப்படுகினறன. உண்மைச் சம்பவத்துக்கும், இதற்கும் எந்த அளவு தொடர்பு என தெரியவில்லை. அத்தனை கொடுமைகள் நடக்கும்போது அமைதியாக இருக்கும் நாயகி இறுதியில் மட்டும் திருந்துவது நாடக்கத்தன்மை.

அதேபோல கொலை ஒன்று அரங்கேற, அதன் மீதான சட்ட நடவடிக்கை என்ன, கல்லூரி நிர்வாகம் தொடங்கி, அரசியல் கட்சியினர், காவல்துறையினர், கம்யூனிஸ்ட் என அனைத்து மலையாளிகளும் தமிழர்கள் மீது வன்மத்துடன் இருக்க அப்படி என்ன காரணம்? ‘ஒருவர் கூட நல்லவரில்லையா?’ என கேள்வி எழாமல் இல்லை. முதல் பாதியில் பாதிப்பின் உணர்வை ஓரளவு கடத்தும் படம், இரண்டாம் பாதியில் அதன் தாக்கத்தை தவறவிடுகிறது. தொடக்கத்தில் வரும் ரெட்ரோ பாடலும், காதல் காட்சிகளும் ரசிக்க வைப்பது ஆறுதல்.

படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறி வரும் ஜி.வி.பிரகாஷ், கோபத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் ஆக்ரோஷ இளைஞனாக மிளிர்கிறார். நேர்த்தியான நடிப்பில் ஈர்க்கும் மமிதா பைஜூ காதலுக்கும், சில காட்சிகளுக்குமே பயன்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம். கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, ஷாலு ரஹீம், சுப்ரமணிய சிவா தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.

80-களின் டேப்ரீக்கார்டர் தொடங்கி, பாழடைந்த ஹாஸ்டல், அதன் அறைகள், திருகும் தொலைக்காட்சிப் பெட்டி, என கலை ஆக்கம் கச்சிதம். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை நாயகனின் எழுச்சி உள்ளிட்ட இடங்களில் கைகொடுக்கிறது. இரண்டாம் பாதிக்கு மேல் இரைச்சல். கிடைக்கும் இடங்களில் தனித்த ஷாட்ஸ்களால் கவனம் பெறுகிறது அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு.

உண்மைச் சம்பவத்தை விழுங்கும் அதீத நாயகத்தன்மையும், பிரசார பாணியிலான இன வெறுப்பும், சோர்வைத் தரும் இடைவேளைக்குப் பின்னான திரைக்கதையும் ரெபலின் புரட்சியை ஒடுக்கிவிட்டன. பாதிக்கப்பட்டவர்களின் வலியை பதிவு செய்யும் படத்தில் இவ்வளவு ஹீரோயிசம் தேவைதானா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x