முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க எனக்கும் ஆசை உண்டு: சண்முகபாண்டியன்

முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க எனக்கும் ஆசை உண்டு: சண்முகபாண்டியன்
Updated on
1 min read

எல்லாரையும் போல தனக்கும் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நாயகிகளுடன் நடிக்கும் ஆசை உள்ளது என நடிகர் சண்முகபாண்டியன் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். 'சகாப்தம்' படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவரது அடுத்த படமான 'மதுரவீரன்' பிப்ரவரி 2-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படம் பற்றிப் பேசிய சண்முகபாண்டியன் இது முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றும், தொடக்கம் முதல், இறுதி வரை ஜல்லிக்கட்டு என்ற களத்தை விட்டு கதை விலகாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரினாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால், 'மதுரவீரன்' படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால் தான் இப்படம் உருவானது.

நான் நகரத்தில் வளர்ந்தாலும் நிறைய பயணம் மேற்கொள்வேன். சிறு வயது முதலே அப்பாவுடன் மதுரைக்கு சென்றுள்ளேன். அம்மாவின் ஊருக்கு சென்றுள்ளேன். நிறைய கிராமங்களுக்கு சென்றுள்ளேன். மதுரையில் நடிக்கும் போது எனக்கு வெளி ஊரில் நடிப்பது போன்ற உணர்வில்லை. படத்தில் மதுரையில் பேசப்படும் தமிழ் பாஷையை கொஞ்சம் பேசியுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை படத்தின் கதையை மட்டுமே தான் பார்ப்பேன். கதை உறுதியாக இருக்கும்பட்சத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன். பி.ஜி.முத்தையாவின் கதை மிகவும் உறுதியானது. அவர் கூறிய கதையை சிறப்பாகப் படமாக்கியுள்ளர். இப்படத்தின் கதைக்கு பொருத்தமாக மீனாட்சி இருந்தார். மீனாட்சி நன்றாக தமிழ் தெரிந்தவர் முதல் படமாக இருந்தாலும் நன்றாக நடித்தார். ஓரு சில இடங்களில் தடுமாறும் போது முத்தையா உதவி செய்வார்.

கதைக்குப் பெரிய நடிகை தேவைப்படும் போது நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். எல்லாருக்கும் பெரிய இயக்குநருடன், பெரிய நடிகையுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  எனக்கும் அந்த ஆசை உள்ளது. படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்த அனுபவம் மிகச் சிறந்த அனுபவம். சின்ன வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும் என்பதால் என்னை அவர் அண்ணன் பையன் போல பார்த்துக்கொண்டார்'' என்றார் சண்முகபாண்டியன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in