

ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜு ஜோடியாக நடித்துள்ள படம், ‘ரிபெல்’. கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி' வினோத், ஆதிரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கியுள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 22-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
ஜி.வி பிரகாஷ் குமார் பேசும்போது, “ இந்தப் படத்தின் இயக்குநர் நிகேஷ், அவரது உறவினர் வாழ்வில் நடந்த உண்மைக் கதையை திரைப்படமாக செய்துள்ளார். மமிதா பைஜு அழகாக இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்கிறேன். அவர்தான் ‘டார்லிங்’ படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம் இது. தமிழ் உரிமை பற்றி அழுத்தமாக பேசியிருக்கிறோம். எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.