

சென்னை: 'தாமிரபரணி', 'பூஜை' படங்களுக்குப் பிறகு விஷால், ஹரி இணைந்துள்ள படம், ‘ரத்னம்’.
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கிறது. இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இணைத்தயாரிப்பு செய்துள்ளனர். இதில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். விவேகா பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடலான, ‘டோண்ட் ஓரி டோண்ட் ஒரிடா மச்சி' சென்னை விஐடி பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்டது.
விழாவில் இயக்குநர் ஹரி பேசும்போது, “இது எனது 17-வது படம், விஷாலுடன் 3-வது படம். தேவிஸ்ரீ பிரசாத்துடன் 6-வது படம்.
விஷாலுடன் இணைந்து முழு நீள ஆக்ஷன் படத்தை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். ‘தாமிரபரணி', ‘பூஜை' படங்களில் ஆக்ஷன் இருந்தது
என்றாலும் குடும்ப சென்டிமென்ட் போன்ற விஷயங்களும் இருந்தன. இது, ‘சிங்கம்', ‘சாமி' போல முழு ஆக்ஷன் படமாக இருக்கும். படத்துக்காக விஷால் கடுமையாக உழைத்துள்ளார்" என்றார்.
விழாவில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 2 மாணவிகளின் கல்விச் செலவை விஷாலின் தேவி பவுண்டேஷன் சார்பாக விஐடி ஏற்றது. இதற்காக விஐடி நிர்வாகத்துக்கு விஷால் நன்றி தெரிவித்தார்.