

'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் வசூல் சர்ச்சை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவு செய்து நீக்கிய ட்வீட் குறித்து தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வசூல் நிபுணர், திரை விமர்சகர், ஊடகவியலாளர் என தனித்தனியாக இருந்த வேலைகள் இப்போது ஒன்றாகவிட்டது. இவர்கள் ரசிகர்களுக்கு தேவையற்ற தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றனர். இதனால், இப்போதெல்லாம் ரசிகர்கள் படத்தின் கருவை விடுத்து வசூல் குறித்து பேசுகின்றனர். ஏன், படத்தின் கதை பற்றியும் அதில் நடித்தவர்கள் பற்றியும் பேச எதுவுமே இல்லையா? கொஞ்சம் பயமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் தொடர்பான வசூலைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர் பதிந்த ட்வீட்டுக்கு காட்டமாக பதிலளித்திருந்தார்.
விக்னேஷ் சிவனின் அந்த ட்வீட்டால் சர்ச்சை எழுந்தது. இதனால் சில நிமிடங்களிலேயே அவர் அந்த ட்வீட்டை அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார். பின்னர் வேறு ஒரு ட்வீட்டையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் ட்வீட் தொடர்பாக எஸ்.ஆர்.பிரபு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்.