‘போர்’ கொண்டாட்டத்துக்கான படம்: அர்ஜுன் தாஸ் தகவல்

‘போர்’ கொண்டாட்டத்துக்கான படம்: அர்ஜுன் தாஸ் தகவல்
Updated on
1 min read

சென்னை: பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘போர்’. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தியில் மார்ச் 1-ல் வெளியாக இருக்கிறது. டி-சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசும் போது, “ படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டமாட்டார்கள். ஆனால் பிஜோய் எங்களுக்கு அதைக் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் ஷூட்டிங்கில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. ‘போர்’ திரைப்படம் கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. கொண்டாட்டத்துக்கான திரைப்படம். நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கின்றன. காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் சொல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். மற்றபடி சிறந்த நண்பன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in