

சென்னை: நடிகை ஜெயசுதாவின் மகன் நிஹார் தமிழில் அறிமுகமாகும் படம், ‘ரெக்கார்ட் பிரேக்’. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் சார்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரித்து, இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராக்தா இஃப்திகர், சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். மார்ச் 8 -ம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட 8 மொழிகளில் வெளியாகும் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் நிஹார் பேசும்போது, "கடந்த ஐந்து வருடங்களாக இந்தப் படத்துக்காகக் கடுமையாக உழைத்துள்ளோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தமிழ், தெலுங்கு உட்பட 8 மொழிகளில் இதை வெளியிடுகிறோம். ஆதரவற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்" என்றார்.
இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா னிவாஸ் ராவ் பேசும்போது, “சென்னை விஜயா கார்டனில்தான் என் சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. இந்தப் படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. இந்தப் படத்தை எனக்கு பிடித்த தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.