திரை பிரபலங்கள் பற்றி அவதூறு பரப்புவதா? - நடிகர் சங்கம் கண்டனம்
சென்னை: சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகளைக் குறிப்பிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசியதற்கு இயக்குநர் சேரன், நடிகர்கள் மன்சூரலிகான், விஷால், நடிகைகள் குஷ்பு உட்பட திரையுலகினரும் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை த்ரிஷா, இதுகுறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜு மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த்ரிஷா, கருணாஸ் குறித்து கேட்கக் கூசுகின்ற , ஆதாரமற்ற, வக்கிர மனப்பான்மையோடு பரவவிடப் பட்டிருக்கும் பொய் கதையை நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. திரைத்துறையை சார்ந்தபிரபலங்களைப் பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி, சுயவிளம்பரம் தேடும் நபர்கள், நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். இதுபோன்று இனியும்நடக்காத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும். நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜு மீது நடிகர் கருணாஸ், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
