“உச்ச நட்சத்திரங்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” - த்ரிஷாவுக்கு ஆதரவாக லெனின் பாரதி காட்டம்

“உச்ச நட்சத்திரங்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” - த்ரிஷாவுக்கு ஆதரவாக லெனின் பாரதி காட்டம்
Updated on
1 min read

சென்னை: “த்ரிஷா மீதான அவதூறு விவகாரத்தில் உச்ச நட்சத்திரங்கள் யாரும் எதையும் சொல்வதில்லை என்கிறார்கள். எப்படி கேட்பார்கள், அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து சினிமாவில் முன்னேறி வந்தவர்கள்” என இயக்குநர் லெனின் பாரதி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

கயல் ஆனந்தி நடித்துள்ள ‘மங்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி, “படத்தின் ட்ரெய்லர், டைட்டில் டிசைன் பார்த்தேன். பொதுவாக ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய டைட்டில்கள், கம்பீரமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘மங்கை’ படத்தின் டைட்டிலில் அத்தனை கீறல்கள், உடைப்பு எல்லாமே இருக்கிறது.

ஒடுக்கப்படும் மக்களுக்காக நாம் குரல் கொடுக்கிறோம். அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செலுத்த முயல்கிறோம். ஆனால், காலம் காலமாக எல்லா சமூகத்திலும், மதத்திலும் ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.

துக்க வீட்டில் உள்ளே புகுந்து அதை செய்தியாக்கி பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகத்தின் வெறிபிடித்த வேட்டையும் இப்படத்தில் இருப்பதாக தெரிகிறது. ‘தோழர்’ கயல் ஆனந்தி தேர்வு செய்யும் படங்கள் அரசியல் மையப்பட்ட ஆழமான கதைகளாக உள்ளன. தொடர்ந்து இப்படியான கதைகளை தேர்வு செய்ய வாழ்த்துகள்.

த்ரிஷா மீதான அவதூறு விவகாரத்தில் நடிகர்கள் யாரும் எதையும் சொல்வதில்லை என்கிறார்கள். எப்படி கேட்பார்கள், அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து சினிமாவில் முன்னேறி வந்தவர்கள். உச்ச நட்சத்திரங்களாக இருக்கட்டும், அடுத்து நாட்டை ஆளத் துடிக்கும் நடிகர்களாக இருக்கட்டும், எல்லோரும் தங்களின் ஆரம்பக்கட்ட படங்களில் பெண் உடலை மையமாக வைத்து தான் சினிமாவில் பயணப்பட்டு வந்துள்ளனர்.

நான் சிறுவனாக இருக்கும்போது, ரஜினி படமாக இருக்கட்டும், கமல் படமாக இருக்கட்டும், சில்க் ஸ்மிதா போஸ்டர் தான் பெரிதாக இருக்கும். சில்க் ஸ்மிதாவின் உடலை மையமாக வைத்து இவர்களின் உருவங்கள் சிறியதாக வைத்த போஸ்டர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

அப்படி, இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் கதாநாயகர்கள் கேள்வி எழுப்பமாட்டார்கள். அவர்கள்தான் பெண்ணை உடலாக பாருங்கள் என போதிக்கும் சினிமாவை தொடர்ந்து எடுப்பவர்கள். பெண்ணை உடலாக பாவிக்க வைக்கும் போக்கை ஏற்படுத்துகிற நாயகர்கள் பெண் விடுதலை குறித்து பேசமாட்டார்கள். அவர்கள் பேசினால் அதற்கு பின்னால் ஏதேனும் சுயநலம் இருக்கும். அப்படித்தான் நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in