

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் படத்துக்கு ‘அமரன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடித்து 1992-ம் ஆண்டு வெளியான படத்துக்கு ‘அமரன்’ என்று தலைப்பு வைத்திருந்தனர். அதே தலைப்பை இதற்கு வைத்திருப்பது ஏன்? என்று பலர் கேட்டனர்.
இதற்கு ராஜ்குமார் பெரியசாமி அளித்துள்ள விளக்கத்தில், “இதன் திரைக்கதைக்கு நான் எழுதிய முதல் வார்த்தை அமரன். அதற்கு, அழியாதவன், போர்வீரன், தெய்வீகமானவன் என்று அர்த்தம். இந்த நினைவு கூரத்தக்கத் தலைப்பை வழங்க சம்மதித்த இயக்குநர் கே. ராஜேஷ்வர், கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.