இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திரும்ப வைத்துச் சென்ற கொள்ளையர்கள்

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திரும்ப வைத்துச் சென்ற கொள்ளையர்கள்
Updated on
1 min read

உசிலம்பட்டி: இயக்குநர் மணிகண்டன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர்.

‘காக்கா முட்டை, கடைசி விவசாயி’ போன்ற திரைப்படங்களின் இயக்குநர் மணிகண்டன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார். இதுவரை இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மணி கண்டன் குடும்பத்தினருடன் சென்னையில் வசிப்பதால், உசிலம்பட்டி வீட்டுக்கு அவ்வப்போது மட்டும் வந்து செல்வது வழக்கம்.

இதனையடுத்து மணிகண்டனின் வீடு பூட்டி இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், கடந்த 8ஆம் தேதி இரவு அவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். கூடவே அவரது இரண்டு தேசிய விருது பதக்கங்களையும் எடுத்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகை மற்றும் வெள்ளி பதக்கங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பையில், தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளனர். அதில், அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு என்று எழுதி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து மணிகண்டனின் வீட்டுக்கு வந்த போலீஸார் தேசிய விருது பதக்கங்களையும், அந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in