Last Updated : 09 Feb, 2024 06:18 PM

 

Published : 09 Feb 2024 06:18 PM
Last Updated : 09 Feb 2024 06:18 PM

லவ்வர் Review: ‘டாக்சிக்’ உறவில் நீடிக்கும் காதல் கவர்ந்ததா?

காலை 10 மணிக்கெல்லாம் குடிக்கும் அளவுக்கு மதுவுக்கு அடிமையான அருண் (மணிகண்டன்) சொந்தமாக ஒரு கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். எந்த வேலையும் செய்யாமல், ‘பிசினஸ்’ செய்யப் போகிறேன் என சொல்லிக்கொண்டு திரியும் அவரும், ஐடியில் பணிபுரியும் திவ்யாவும் (ஸ்ரீகவுரி ப்ரியா) கல்லூரியிலிருந்தே காதலிக்கின்றனர். 6 வருட காதல் கொஞ்சம் கொஞ்சமாக கசக்கத் தொடங்குகிறது.

‘இவருடன் பழகக் கூடாது’, ‘அவருடன் வெளியே செல்லக் கூடாது’ என கட்டளை போடும் அருணின் ‘பாதுகாப்பு’ உத்தரவுகளை மீறி தனக்கு பிடித்தமானதை திவ்யா செய்ய, அதன் விளைவாக உறவில் விரிசல் விழுகிறது. இந்த விரிசல் விரிவடைய, இறுதியில் இவர்களின் காதல் வாழ்ந்ததா, வீழ்ந்ததா என்பதுதான் ‘லவ்வர்’ (Lover) படத்தின் திரைக்கதை.

‘பொசசிவ்னஸ்’ என்ற பெயரில் ‘இறுக்கி’ப் பிடிப்பதை காதலாக நினைக்கும் ஓர் ஆணும், தனக்கு விருப்பமானதை செய்து ‘சுதந்திர’மான உலகைத் தேடும் பெண்ணும் காதலித்தால் அந்தக் காதலின் ஆயுட்காலமும், எதிர்காலமும் எப்படியிருக்கும் என்பதை முடிந்த அளவுக்கு ‘எங்கேஜிங்’ திரைக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

காதல், சண்டை, எச்சரிக்கை, அழுகை, பிரிவு, ஏமாற்றம் என இடைவேளைக்கு முன்பான பகுதி ‘வந்தே பாரத்’ ரயில் போல வேகம் பெறுகிறது. சேர்வதற்கான முயற்சிகள், சண்டை, புரிதலற்றதன்மை, நாயகனின் சைகோத்தனம் என கால்வாசி பெட்ரோலில் ஓடும் வண்டியாக இரண்டாம் பாதி திரைக்கதை நகராமல் தேங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டுமா என்பது போல எளிதில் கணிக்கக் கூடிய, இழுக்கப்பட்ட காட்சிகள் அயற்சி.

தன்னிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும், மற்ற எந்த ஆணிடமும் நெருங்கி பழகக் கூடாது என்பது, கெட்டவார்த்தையில் திட்டுவது, ‘எங்க அம்மாவ யோசிச்சு பாத்தீயா?’ என எமோஷனல் ப்ளாக் மெயில் செய்வது, குடிப்பது, டார்ச்சர் செய்துவிட்டு கடைசியில் ‘சாரி என்னை ஏத்துக்கோ ஒரு சான்ஸ் கொடு’ என கெஞ்சி அழும் ‘சைக்கோ’ நாயகனை போற்றியும், ‘உங்க அம்மா, உங்க டாக்சிக் அப்பாகிட்ட இன்னொரு சான்ஸ் கேட்டா ஒத்துப்பியா’ என நியாயம் கேட்கும் நாயகியை குற்றவுணர்ச்சி கொண்டு குறுகி நிற்க வைத்திருப்பதும் ஆபத்தான போக்கு.

கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு ‘டாக்சிக்’ உறவில் பாதிக்கப்படும் நாயகனின் தாய், தன்னுடைய மகனின் குணமறிந்தும், ‘கல்யாணத்துக்கு அப்புறம் உன் பாடு’ என வசனம் பேசுவதும், தன் தந்தையை பார்த்து வெறுக்கும் நாயகன், அவரைப்போலவே நடந்துகொள்வதும் முரண்.

குடிப்பது, புகைப்பது, கஞ்சா என போதை ஒருபுறமும், அடங்காமல், திமிரோடு அதிகாரம் செலுத்தும் ஆணாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் மணிகண்டன். ஜன்னலைப் பார்த்து அழும் காட்சியும், இறுதிக் காட்சி, ஆங்காங்கே வரும் ஏற்ற இறங்க வாய்ஸ் மாடுலேஷனும் கவனிக்க வைக்கின்றன.

ஸ்ரீகவுரி ப்ரியா தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தி, கதறி அழும் இடங்களிலும், மனதுக்குள் புழுங்கி, காதலிலிருந்து வெளியேறவும், முடியாமல் நீடிக்கவும் முடியாமல், பிடித்ததை செய்யவும் முடியாமல், ‘காதலிச்சதுதான் பாவம்’ என தவிக்கும் இடங்களிலும் கதாபாத்திரத்துக்கு நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.

ஸ்மார்ட் ஐடி பையன் கதாபாத்திரத்தில் தனக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் கண்ணா ரவி. ஹரிஷ்குமார் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஷான் ரோல்டனின் பிண்ணனி இசை ஈர்த்த அளவுக்கு பாடல்கள் ஈர்க்கவில்லை. சுற்றுலா செல்லும் இடங்களின் நிலவழகை ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா அழகியலுடன் காட்சிப்படுத்தியுள்ளது. எடிட்டர் பாரதி விக்ரமன் காட்சிகளை விட்டு பாடல்கள் வரும் இடங்களையாவது கூடுதலாக ‘நறுக்கி’யிருக்கலாம். இரண்டாம் பகுதியில் இரண்டு க்ளைமாக்ஸை பார்த்த உணர்வு.

‘லவ் டுடே’, ‘அர்ஜுன் ரெட்டி’ மாதிரியான படங்களின் வெற்றி கொடுத்த ஊக்கம் மற்றொரு டாக்சிக் நாயக ‘காதல்’ கதையாக ‘லவ்வர்’ படத்தை உருவாக்கியுள்ளது. சமூகத்தில் நடக்கும் ஆதிக்க காதலை காட்சிப்படுத்திகிறோம் என்றாலும், யார் பக்கம் நின்று எதனை வலியுறுத்துகிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் நாயகனை போற்றி, பாதிக்கப்படும் நாயகியை குற்றவுணர்ச்சிக்குளாக்கியது ஒருபுறமும், அதிகாரம் செலுத்தும் ஆண்கள் தங்கள் தவறை உணராமல் போனாலும் வாழ்வில் அவர்களுக்கு வெற்றி உறுதி என்ற பாசிட்டிவ் நோட் தவறான ஊக்கத்துக்கு உதாரணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x