Published : 07 Feb 2024 11:43 AM
Last Updated : 07 Feb 2024 11:43 AM

“அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை” - நடிகர் விஷால் அறிக்கை

நடிகர் விஷால்

சென்னை: “நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நாள் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், “மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்” என நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்துக்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நாள் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x