“அதிர்ந்து பேசா விஜய் அரசியல் களத்தில் எப்படி..?” - இது பார்த்திபனின் வாழ்த்து

“அதிர்ந்து பேசா விஜய் அரசியல் களத்தில் எப்படி..?” - இது பார்த்திபனின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: “அதிர்ந்து பேசா அமைதியே தன் அடையாளமான அன்பர் விஜய், அரசியல் களத்தில் எப்படி சமாளிப்பார் என அவர் மீதுள்ள அக்கறையால் நாம் யோசித்தாலும், அவர் சாமர்த்தியமாக ஆலோசித்துவிட்டுதான் கால் பதிக்க முழு வீச்சில் இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது” என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவு: “அரசியல் களத்தில் புதிதாக புரட்சி குரல் கொடுத்திருக்கும் நண்பர் விஜய்க்கு வாழ்த்து கூறும் செய்தி இது. நண்பர் விஜய்யின் கட்சிக்கு பின்புலமாய் உள்ள அர்பணிப்பு ஆச்சரியமளிக்கிறது. ரூ.100 கோடிக்கும் மேல் சன்மானம் பெறும் விஜய், 100 கோடிக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட இந்திய அரசியலில், தமிழக அரசியல் என்பது நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்க வேண்டும். தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது.எஸ்எஸ் போட்டியிலிருந்து விலகி சிஎம் போட்டிக்குள் நுழையும் ஆக்‌ஷன் அதிரடியாகவும் உள்ளது. முழுநேரமாக வருவது பாராட்டுக்குரியது.

ஆனால், முற்றும் துறந்து முனிவராவது போல, நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நவரத்ன கிரீடத்தை கழற்றி வைக்கப்போகிறார் என்பதைக்கண்டு மனம் சங்கடம் கொண்டது. சினிமா ரசிகனாக, விஜய் விரும்பியாக வேண்டுமா இவ்வளவு தியாகம் இவ்வாறு பல கேள்விகள்.

அவர் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். இருக்கலாம். அரசியல் ஒரு சூரசம்ஹார சூட்சமம் என்பர் அதன் ஆழம் அறிந்தவர்களும், அளக்கத் தெரியாவதர்களும். ‘சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்; வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்’ கண்ணதாசன் வேறு காதோரம் கிசுகிசுக்கிறார்.

நடிக்க வந்தபோதே அடிக்க வந்த ஆயிரம் விமர்சனங்களை வெட்டி வீழ்த்தி தமிழகத்தில் வெற்றி கண்டவர். அதிர்ந்து பேசா அமைதியே தன் அடையாளமான அன்பர் விஜய், அரசியல் களத்தில் எப்படி சமாளிப்பார் என அவர் மீதுள்ள அக்கறையால் நாம் யோசித்தாலும், அவர் சாமர்த்தியமாக ஆலோசித்துவிட்டுதான் கால் பதிக்க முழு வீச்சில் இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது. ‘அமைதியான கடலே ஆழிப்பேரலையையும் உருவாக்குகிறது’ என்பதால் மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக உயரும் விஜய்யை நெஞ்சாரமாக வாழ்த்துகிறேன்” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in