

நடிகை நஸ்ரியா - நடிகர் பஹத் பாசில் திருமணம் திருவனந்த புரத்தில் வியாழக்கிழமை நடந்தது. கேரள அமைச்சர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர்..
மலையாள நடிகையான நஸ்ரியா, தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘வருஷம் 16’, ‘காதலுக்கு மரியாதை’ உள்பட பல படங்களை இயக்கிய இயக்குநர் பாசிலின் மகன் பஹத் பாசில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். ‘எல் பார் லவ்’ என்ற மலையாள படத்தில் சேர்ந்து நடித்தபோது, நஸ்ரியாவுக்கும் பஹத்துக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நஸ்ரியா பஹத் திருமணம், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடந்தது. மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, துல்கர், இயக்குநர்கள் லாலே, பிரியதர்ஷன், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பஹத் பாசில் வீட்டில் நடக்கிறது. இதில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் கலந்துகொள்கின்றனர்.