Published : 02 Feb 2024 05:50 PM
Last Updated : 02 Feb 2024 05:50 PM

கோடம்பாக்கமும் கோட்டையும்... - நடிகர் விஜய்க்கு முன்னே சில பல தடங்கள்!

‘இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடுவார்’ என கட்டியம் கூறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை. கலைத்தாயின் இளைய மகனாக பார்க்கப்பட்டு வந்த நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்கள் பலருக்கும் தமிழக அரசியல் களத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து நீடித்தே வருகிறது. இந்நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில், அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள், அரசியல் களம் காண்பது புதிதல்ல. பொதுவாகவே திராவிட இயக்கங்களில் பல்வேறு திரைத் துறைச் சார்ந்த பிரபலங்கள் இடம்பெறுவதாக கூறுவது வழக்கம். சினிமா நடிகர்கள் மீதான கவர்ச்சியை திராவிட இயக்கங்கள் மட்டும்தான் பயன்படுத்தி உள்ளதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. தற்போதைய அரசியல் களத்திலும், தேர்தலிலும் கூட அனைத்துக் கட்சிகளிலும் திரைத் துறை பிரபலங்களைக் காண முடிகிறது. அரசியலிலும், தேர்தல் களத்திலும் திரைப் பிரபலங்களை பயன்படுத்தும் யுக்திக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.

இந்தியத் திரை உலகில் அதிக தொகையை சம்பளமாக பெற்றவரும், நடிகையும், பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள் தான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினரான முதல் திரைப் பிரபலம். மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், சத்தியமூர்த்தி ஐயர் ஆகியோரது வேண்டுகோளுக்கு இணங்க காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார். அதே நேரத்தில், சினிமா மற்றும் நாடக கவர்ச்சியை கடுமையாக விமர்சித்தவர் தந்தை பெரியார். அவர் இந்த கவர்ச்சியின் மூலம் வரும் புகழை விரும்பவில்லை. ஆனால் அவரது, பாசறையில் இருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி போன்றோர் திரைத்துறை பிரபலங்களாக இருந்து அரசியல் களம் கண்டவர்கள். ஆனால், பெரியார் இறுதி வரை சினிமா மற்றும் நாடக கவர்ச்சியால் கிடைக்கும் புகழை விரும்பாதவராகவே இருந்தார்.

இந்த முரண்பாடுகளை, அவரிடமிருந்து வெளியே வந்த பின்னர் அண்ணாவும், கருணாநிதியும் சினிமாவை தங்களது கருத்து பரப்புரைக்கான தளமாக பயன்படுத்த தொடங்கினர். குறிப்பாக இவர்கள் பணியாற்றும் திரைப்படங்களில் திமுக சார்ந்த கருத்துகளைப் பரப்புவது, கட்சிக் கொள்கைகளை விளக்குவது, உதயசூரியன் சின்னத்தை காட்டுவது என பல்வேறு வகையில் பறைசாற்றினர். இதில் அண்ணா, கருணாநிதியை போல எஸ்.எஸ்.ராஜேந்தின், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் கே.ஆர்.ராமசாமி முதன்மையானவர். கடந்த 1960-ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினரானார். அந்த சமயத்தில் சட்ட மேலவை உறுப்பினராக 33 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்போது திமுகவிடம் 15 எம்எல்ஏக்களே இருந்தனர். அந்த சமயத்தில் தேவையான எம்எல்ஏக்களை வைத்திருந்த ஜனநாயக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவால் கே.ஆர்.ராமசாமி சட்ட மேலவை உறுப்பினரானார்.

ஆனால், திமுக உருவான பின்னர், சினிமா கவர்ச்சியை முழுமையாக பயன்படுத்தினார் எம்ஜிஆர். தனது திரைப்படங்களில் அண்ணாவின் கொள்கையை பேசுவது, பாடுவது, அவரது புகைப்படத்தைக் காட்டுவது, கருப்பு, சிவப்பு கலந்த உடைகளை அணிவது என அனைத்து விதமான யுக்திகளையும் எம்ஜிஆர் கையாண்டார். நாடோடி மன்னன் திரைப்படத்தில் முதன்முதலாக திமுக கட்சிக் கொடியை காட்டியவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவிலிருந்து வெளியேறிய எம்ஜிஆர், 1972-ல் அதிமுகவைத் தொடங்கினார். அடுத்த 5 ஆண்டுகளில், 1977 முதல் 1987 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். எம்ஜிஆரைப் போலவே நடிகர் சிவாஜி கணேசனை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. நடிகர் சிவாஜி 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெருந்தலைவர் காமராஜருக்காக சிவாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவில் சட்டப்பேரவைக்கு தேர்வான முதல் திரைப் பிரபலம் லட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். 1962-ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் திமுகவில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கடந்த 1980-ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதே காலக் கட்டத்தில் அதிமுகவில் உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, 1983-ஆம் ஆண்டு அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். 1984-1989 காலக்கட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார், கடந்த 1989-ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 1991-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக முதல்முறை பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அதைத்தொடர்ந்து பல்வேறு கால இடைவெளிகளில் 5 முறை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்துள்ளார்.

தமிழகத்தில் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின், சினிமா நட்சத்திரங்கள் பலருக்கு அரசியல் ஆசை அதிகமானது. ஆனால், எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோதே அவரது ஆட்சியை விமர்சித்தவர் டி.ராஜேந்தர். திமுக தலைவர் கருணாநிதியின் அபிமானியான இவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திமுகவில் இருந்து விலகி 1989-ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 1991-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 1996-ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். 2006-ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்ற பின்னர் திமுகவில் இணைந்து சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவி பெற்றார். இது திமுகவில் இருந்தபோது எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் வகித்த பதவியாகும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என கட்சியைத் தொடங்கினார் டி.ராஜேந்தர்.

கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் திமுக - தமாக கூட்டணி பெருவாரியான வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் இக்கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரித்து தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார். இதன் பின்னர் வந்த அவரது திரைப்படங்களில் அரசியல் சார்ந்த பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றன. அவை மக்கள் மத்தியில் ஒருநாள் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இதே காலக்கட்டத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான நடிகர் ராமராஜனின் சினிமா கவர்ச்சி அவரை எம்பியாக்கியது. கடந்த 1998-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராமராஜனை மக்களவைக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. ஆனால், அப்போது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு குறைவான நாள்களில் கவிழ்ந்ததால், ராமராஜன் தனது பதவியை இழந்தார்.

மறைந்த இயக்குநர் ராம நாராயணன், கடந்த 1989-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் தனது ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்தே அரசியல் நெடி கலந்த நகைச்சுவைகளை பேசியவர். தொடக்கத்தில் திமுகவில் இருந்த அவர் பின்னர் அதிமுகவில் இணைந்தார். கடந்த 2001-2007 காலக்கட்டத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். திரைத்துறையில் பொலிட்டிக்கல் சட்டையர் என்ற பாணி நகைச்சுவையை உருவாக்கியவரும், அரசியல் விமர்சகரும், இதழியலாளருமான சோ. ராமசாமி கடந்த 1999 -2005 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சந்திரசேகர். ஆரம்பகாலத்தில் பொதுவுடைமை அரசியல் பேசிய படங்களான சிவப்புமல்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர், திமுகவில் இணக்கமாக இருந்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். இதேபோல குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ஆரம்பம் முதலே அதிமுகவில் இருந்து வந்தார். கடந்த 2016-ஆம் நடந்த பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர்.சரஸ்வதி, தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் திரைப்படங்களில் அரசியல் பேசி நடித்து வந்த விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரைத் தவிர தேமுதிக சார்பில் போட்டியிட்ட யாரும் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்தத் தேர்தலில் அக் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் அனைத்து அரசியல் கட்சியினரையும் வியந்து பார்க்கச் செய்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. அத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த மீண்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் வெற்றி பெற்று சட்டப்பேரவை சென்றனர். பின்னர் ஜெயலலிதாவைச் சந்தித்து அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதேபோல், தனது ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த நடிகர் சரத்குமார் கடந்த 1998-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வி அடைந்தார். பின்னர் 2001-ஆம் ஆண்டு அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். அந்தப் பதவியை ராஜினாமா செய்த சரத்குமார் 2006 பேரவைத் தேர்தலின்போது அதிமுகவில் இணைந்தார். 2007-ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். 2011-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனும் நடிகருமான ராதாரவி ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். கடந்த 2002-ஆண்டு நடந்த சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திமுக, அதிமுகவில் இருந்த ராதாரவி 2019-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

தனது உறவினரான கே.என்.நேருவால் அரசியல் களம் கண்டவர் நடிகர் நெப்போலியன். திமுகவில் இருந்த நெப்போலியன் கடந்த 2001-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அப்போதைய தமிழகத்தின் பெரிய தொகுதியான வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நெப்போலியன் மத்திய இணை அமைச்சரானார். அழகிரி ஆதரவாளர் என்பதால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட 2014-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

நகைச்சுவை நடிகரான எஸ்.வி.சேகரிடம் தான் நெப்போலியன் 2006-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.வி.சேகர் வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தார்.

நகைச்சுவை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர்களைத் தவிர நடிகர்கள் ஆனந்தராஜ், செந்தில், குமரிமுத்து, தியாகு, மனோபாலா, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், குண்டு கல்யாணம், சிங்கமுத்து, வடிவேல், நடிகைகள் குஷ்பூ, விந்தியா, கௌதமி, சிம்ரன், கோவை சரளா, நமீதா என நட்சத்திரப் பட்டாளமே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் நேரங்களில் பிரசாரம் செய்துள்ளனர்.

இன்று, நாளை, நாளை மறுநாள் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை. கலைத்தாயின் இளைய மகனாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தார். கட்சித் தொடங்கிய ஓராண்டுக்குள் வந்த 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 37 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 3.7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேபோல், 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முதற்கட்ட பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு அனைவரது பார்வையும் தன் பக்கம் திருப்பினார் கமல்ஹாசன். இவருக்கு முன்பாக, 2015-ல் வீரத்தமிழர் முன்னணி எனும் அமைப்பைத் தொடங்கிய இயக்குநர் சீமான், நாம் தமிழர் கட்சி சார்பில், 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார். 2016 முதல் தொடர்ந்து அவரது கட்சியும் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறது.

இப்படியாக, தமிழ் திரை உலகில் உச்சம் தொட்ட நடிகர்கள் பலருக்கும் தமிழக அரசியல் களத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து நீடித்தே வருவதையே, விஜய்யின் அரசியல் வருகை வெளிப்படுத்தியிருக்கிறது.

| உறுதுணை: ஜீவசகாப்தனின் 'எம்.ஜி.ஆர். முதல் ரஜினி வரை' புத்தகம் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x