

'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் முன்வைத்த விமர்சனத்துக்கு தான் காட்டமாக பதிவு செய்த பதில் ட்வீட்டை நீக்கிதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
சூர்யா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், "ஜனவரி மாதம் வெளியான படங்கள் எதுவுமே லாபகரமாக இல்லை. பிப்ரவரி மாதமாவது நல்லபடியாக இருக்கும் என நம்புகிறேன்" என்று நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
அதைக் குறிப்பிட்ட விக்னேஷ் சிவன் "சொல்லிட்டாரு...., எவ்வளவுதான் நாங்கள் கடினமாக உழைத்தாலும் சிலர் இதுபோன்ற அர்த்தமற்ற விமர்சனங்களால் எங்களை ஊக்கமிழக்கச் செய்கின்றனர். அலுவலகத்துக்கு வந்து காசுக்காக கைநீட்டி இரைந்து நின்றுவிட்டு இதையும் செய்கின்றனர். இப்படியான எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களைப் பார்த்தாலே.. விரட்டி விரட்டி" என்று தெரிவித்தார்.
விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டால் சர்ச்சை எழுந்தது. இதனால் சில நிமிடங்களிலேயே அவர் அந்த ட்வீட்டை அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார்.
பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு திரைப்படத்தை வசூல் போன்ற எண்கள் அடிப்படையில் அணுகுவது தயாரிப்பாளரின் வேலை. மக்கள் ரசிப்பதற்காக மட்டுமே படத்துக்கு வருகின்றனர். ஒவ்வொரு படத்தையும் ரசித்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் விமர்சகராகிவிட்டனர். அதற்கு அவசியமில்லை. வாழ்க்கை அழகானது அதனால் நேர்மறையாக அதை எதிர்கொள்வோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இருப்பினும், விக்னேஷ் சிவன் செய்த ட்வீட்டை பலரும் ஸ்க்ரீன்ஷாட் செய்து அவரது ட்வீட்டை குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் நேற்றிரவு முதலே சர்ச்சை நிலவி வருகிறது.