

சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஏப்.26-ல் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்க இருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து ஹிட்டான படம், ‘துப்பறிவாளன்’. 2017-ம்ஆண்டு வெளியான இதன் 2-ம் பாகம் சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் ‘துப்பறிவாளன் 2’படத்தைத் தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் வேலைகளை விஷால் தொடங்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காக வரும் 1-ம் தேதி அவர் லண்டன் செல்கிறார்.