Last Updated : 25 Jan, 2024 06:21 PM

 

Published : 25 Jan 2024 06:21 PM
Last Updated : 25 Jan 2024 06:21 PM

ப்ளூ ஸ்டார் Review: அரசியல் தூவிய திரை ஆட்டத்தின் ஸ்கோர் எப்படி?

அரக்கோணத்தில் ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையிலான ‘ப்ளூ ஸ்டார்’, ராஜேஸ் தலைமையிலான ‘ஆல்ஃபா பாய்ஸ்’ கிரிக்கெட் குழுக்கள் இயங்கி வருகிறது. அணியில் முன்பிருந்தவர்களால் நடந்த பிரச்சினையின் காரணமாக இரண்டு டீமும் எதிரெதிர் அணியாக விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு குழுக்களுக்கும் இடையில் ஒருநாள் மோதல் வெடிக்க, நீண்ட நாட்களாக இருந்த தடை தகர்த்தெறியப்பட்டு, கோயில் திருவிழாவில் கிரிக்கெட் நடத்த முடிவு செய்யப்படுகிறது. இதில் ராஜேஷ் லீக் போட்டிகளை ஆடும் தேர்ந்த கிரிக்கெட்டர்களை வெளியிலிருந்து தனது டீமில் இறக்கி ப்ளூ ஸ்டாருக்கு டஃப் கொடுக்கிறார். இந்தப் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதுடன், அடுத்து நடக்கும் சம்பவங்களும், திருப்பங்களும்தான் படத்தின் திரைக்கதை.

விளையாட்டை விளையாட்டாக அணுகாமல் அதைச்சுற்றி நடக்கும் அரசியலையும், வெறுப்பையும், சாதிய முரணையும் அழுத்தமாக பதியவைத்திருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார். அதேவேளையில் அதனை எங்கேஜிங்காகவும் ‘பிரச்சார’ தொனியில்லாமலும் சொல்லியிருப்பது தேர்ந்த திரைமொழியின் வெளிப்பாடு. அதற்கு தமிழ்பிரபாவின் எழுத்து துணைபுரிகிறது. ஸ்போட்ஸ் ட்ராமா களத்தை அழகாக்குவது அதன் வித்தியாசமான கதாபாத்திரங்கள்தான். அந்த வகையில் களத்திலும், காதலிலும் பிரித்விராஜன் (பாண்டியராஜனின் மகன்) செய்யும் ‘அட்ராசிட்டி’ ரசிக்கவைக்கிறது.

அதேபோல விளையாட்டின் மேன்மையை உணர்த்தும் புல்லட் பாபுவாக வருபவர் சிறிய கேரக்டர் என்றாலும் கவனம் பெறுகிறார். அவரிடம், “இந்தியா டீமுக்கு ஏன் ஆடல” என கேட்கும்போது, “ஏன்னா அது இந்தியா டீம். எப்டியும் அங்க போனா கூட சேர்க்க மாட்டான். ஆயிரம் பாலிடீக்ஸ் இருக்கும். நான் வெஸ்ட் இன்டீஸுக்கு ஆடப்போறேன்” என போகிற போக்கில் அவர் பேசும் வசனங்கள் நச்.

அதேபோல, அசோக் செல்வனுக்கு கிரிக்கெட் குறித்து ஆட்வைஸ் கொடுக்கும் கீர்த்திபாண்டியன் கதாபாத்திரம் வழக்கமான காதல் பாத்திரமாக இல்லாமல் பொறுப்புடன் எழுதப்பட்டிருக்கிறது. “நாங்கல்லாம் கிரிக்கெட் பாக்க மாட்டோமா?, எங்கள எல்லாம் கிரிக்கெட் ஆட விட்டா தானே தெரியும்” என்பதும், “செயின், கம்மல் மேல ஆசையில்ல, எனக்கு க்ரவுன்ட்ல கிரிக்கெட் ஆடணும்” போன்ற வசனங்கள் அவரின் விருப்ப வெளிப்பாடாகவும், கிரிக்கெட்டை ஆண்கள் விளையாட்டாக சுருக்குவதையும் கேள்வி கேட்கிறது.

சமகால தலைமுறையில் கெட்டிப்பட்டிருக்கும் சாதிய முரண் உடையும் இடமும், அதற்கான காரணமும் படத்தின் போக்கை மாற்றி சுவாரஸ்யமாக்குகிறது. ஊர் vs காலனி என பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, ‘டோர்னமென்ட்’ ஆட இருவருக்கும் தகுதியில்லை என ஒலிக்கும் வேறொரு கூட்டத்தின் குரலின் மூலம் கிரிக்கெட்டுக்குள் இருக்கும் சாதிய ஆதிக்கத்தை விமர்சிக்கிறது படம். ஒரு கட்டத்தில் இரு துருவங்களாக இருப்பவர்கள் இணைந்து களம்புகுவதும், கிரிக்கெட் மேட்சும் ‘கூஸ்பம்ஸ்’ தருணங்களுக்கான தியேட்டர் மெட்டிரியல்.

“யாருக்கிட்ட தோத்தோம்னு பாக்கக் கூடாது; ஏன் தோத்தும்னு பாக்கணும்”, “வெறுப்பு அழிவுக்கு வழிவகுக்கும், நிதானம் நிறைய சொல்லி தரும்”, “வானத்துக்கு கீழ எல்லோரும் ஒண்ணுக்கொண்ணு சமம்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.

கிரிக்கெட் காட்சிகள் பரபரவென கடக்க முக்கியமான காரணம் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. அசோக் செல்வன் களமிறங்கும்போது ஒலிக்கும் பறையிசை, அறிவின் ‘Back on the street’, ‘அரக்கோணம் ஸ்டைல்’, உமாதேவி வரிகளில் ‘ரயிலின் ஒலிகள்’ பாடல்கள் விஷுவலுடன் சேர்ந்த ட்ரீட்.

ஃபங்க், மீசை, தாடியில்லா விடலைப்பருவ தோற்றம், அடிக்கடி வெளிப்படும் ஆக்ரோஷம், அவமானப்பட்டு கலங்கும் இடம் என ‘ரஞ்சித்’ கதாபாத்திரத்துக்கு நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் அசோக் செல்வன். திமிறிக் கொண்டும், இரு வேறு மனநிலையில் சிக்கிக்கொண்டும், தோல்வியை ஏற்க மறுத்து உண்மையும் உணரும் கதாபாத்திரத்திலும் சரியான ‘அப்போனன்ட்’டாக ஈடுகொடுக்கிறார் சாந்தனு. ‘அராத்து’பெண்ணாக கீர்த்தி பாண்டியனுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

முதிர்ச்சியான கிரிக்கெட் பிளேயராகவும், ஒற்றுமையை வலியுறுத்தி, பிரிவினையின்போது உடையும் இடங்களிலும் பக்ஸ் ஸ்கோர் செய்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் லிஸ்ஸி ஆண்டனிக்கு திரையரங்குகளில் அப்ளாஸ் அள்ளுகிறது. மகனுக்கு துணை நிற்கும் பொறுப்பான தந்தையாக இளங்கோ குமரவேல், ஒருசில சீன்ஸ் என்றாலும் கவனம் பெறுகிறார் திவ்யா துரைசாமி.

‘ரயிலின் ஒலிகள்’ பாடலில் வரும் ஷில்அவுட் ஷாட்ஸ், இடைவேளைக் காட்சி, அம்பேத்கர் சிலைக்கு கீழ் இரு வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்கள் நிற்கும் காட்சி, மைதானத்தின் டாப் ஆங்கிள் என அரக்கோணத்தை தனது கேமராவின் பல்வேறு ‘கோண’த்தில் பதிவு செய்திருக்கிறார் தமிழ் ஏ.அழகன். கிரிக்கெட் போட்டிகளை விறுவிறுப்பாகவும், இறுதிப்போட்டி முடிவை ரிவர்ஸில் கொண்டு சென்றும் தனது ‘கட்ஸ்’ மூலம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஆர்.கே.செல்வா.

எனினும், இறுதி ‘ஹீரோயிச’ பிம்பம் நெருடல். சில லாஜிக் மீறல்களும் எட்டிப் பார்க்கின்றன. இதையெல்லாம் கடந்து எங்கேஜிங்கான திரைக்கதையால் ‘ப்ளூ ஸ்டார்’ படம் ஸ்கோர் செய்ய தவறவில்லை.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x