“எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை” - பிரதமர் மோடியை சந்தித்த பின் அர்ஜுன் நெகிழ்ச்சி

“எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை” - பிரதமர் மோடியை சந்தித்த பின் அர்ஜுன் நெகிழ்ச்சி

Published on

சென்னை: “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்த ஆளுமை பிரதமர் மோடி” என நடிகர் அர்ஜுன் கூறினார்.

பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஜன.19) தமிழகம் வந்தார். சென்னையில் நடக்கும் கேலோ இந்தியா போட்டிகளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார். அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இரவு அவர் சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் கோயில் சென்றார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தபோது, பல முக்கிய பிரமுகர்களும் அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். அந்த வகையில் நடிகர் அர்ஜுனும் தனது குடும்பத்தினருடன் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய ஆஞ்சநேயர் கோயிலுக்கு வர கோரி பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். விரைவில் வருகை தருகிறேன் என கூறினார்.

முதல் முறையாக அவரை நேரில் சந்திக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை அவர். நான் பாஜகவில் இணையவில்லை. பிரதமர் மோடியை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவர் வந்திருந்ததை கேள்விப்பட்டு சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். உடனடியாக அவரைப் பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் இங்கே வந்தோம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in