Published : 20 Jan 2024 08:30 AM
Last Updated : 20 Jan 2024 08:30 AM
சென்னை: நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தினார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் அரசுமரியாதையுடன் கோயம்பேட்டில்உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர், விஜயகாந்த் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் சிவக்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், விக்ரம்,ஜெயம் ரவி, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, "நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது" என்றார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பேசும்போது, ‘‘பல அவமானங்களையும், விமர்சனங்களையும் கடந்துதான் இந்த உயரத்துக்கு விஜயகாந்த் வந்தார். தனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். கடைநிலை நடிகர்களுக்கும் அவர் குரல் கொடுத்தார். இது அவர்கள் செய்த பாக்கியம். அவரது கோபம்நியாயமானது. எந்த அரங்கமாக இருந்தாலும் விஜயகாந்த் பயப்படமாட்டார். தனக்குப் பிடிக்காதவர்களைக்கூட கூப்பிட்டுப் பேசுவார். அந்த மாதிரியான குணநலன்களை நாம் காப்பியடிக்கலாம்" என்றார்.
நிகழ்வில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT