Published : 15 Jan 2024 07:33 AM
Last Updated : 15 Jan 2024 07:33 AM

திரை விமர்சனம்: கேப்டன் மில்லர்

காலனிய ஆட்சி காலத்தில், தென் தமிழக கிராமம் ஒன்றில் வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க சாதியினர் - பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் ஆகியோரின் ஒடுக்குமுறையால் அடிமைகள்போல் வாழ்கின்றனர். இந்த அடக்குமுறையிலிருந்து தன் மக்களை மீட்டெடுக்க விரும்புகிறான் அனலீசன் (தனுஷ்). அதற்காக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும் அவன், பின் ‘கேப்டன் மில்லர்’ என்ற ஆயுதப் போராளியாக மாறுகிறான். அவன் எப்படிப்பட்டப் போராளியாக விளங்கினான், தனது மக்களை அவனால் மீட்க முடிந்ததா என்பதைச் சொல்கிறது கதை.

ஒடுக்கப்பட்ட, ஆலய நுழைவு மறுக்கப்பட்ட மக்களின் பார்வையில் எது உண்மையான விடுதலையாக இருக்க முடியும் என்ற கேள்வியை அடித்தளமாக வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சமூக விடுதலையைப் பேசுவதற்கு, விடுதலைப் போராட்டக் காலகட்டத்தைக் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்திருப்பது, திரைக்கதையில் தீவிரமான அழுத்தத்தை இறுதிவரை தக்கவைக்கிறது. அதேநேரம், இரண்டாம் பாதி ஆக்‌ஷன் ஆட்டமாக மாறிவிடுவது பலவீனம்.

அனலீசனின் குழப்பங்கள், குற்றவுணர்ச்சி, தன்னை மீறிச் செய்யும் தவறுகள் என முதன்மைக் கதாபாத்திரத்துக்கான ‘கேரக்டர் ஆர்க்’ தனுஷ் என்கிற நடிப்பு அசுரனுக்குப் பெரும் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. முகத்தில் கருப்பு மையும், பிறிதொருமுறை திருநீறும் பூசிக்கொண்டிருக்கும் காட்சியிலும் கூட தனது நடிப்பை மிகையின்றிப் பிரதிபலித்து, அசரடிக்கிறார் தனுஷ். சிவராஜ்குமார் கதாபாத்திரம், வரவேண்டிய நேரத்தில் மட்டும் வந்து செல்வதும் நடிப்பில் அவர் அடக்கி வாசித்திருப்பதும் ஆச்சர்யம்.

ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவராக இருந்தபோதும் தன்னைப் போராளியாக உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறும் வேல்மதி
(பிரியங்கா மோகன்) கதாபாத்திரத்துக்கு நேர்மையான நியாயத்தைச் சேர்க்கமுடியும் என்று காட்டியிருக்கிறார் பிரியங்கா மோகன். எதிர்மறைக் கதாபாத்திரங்களில் வரும் ஜெயப்பிரகாஷ், ஜான் கோக்கென், துணைக் கதாபாத்திரங்களில் வரும் நிவேதிதா சதீஷ், குமரவேல், அப்துல் லீ ஆகியோர் சிறப்பான நடிப்பால் ஈர்க்கிறார்கள்.

காலகட்டத்தை ஆடைகளில் கொண்டு வந்ததில் பூர்ணிமா ராமசாமி - காவ்யா ராமின் பங்களிப்பு நேர்த்தியானது. வட்டார இசைக் கருவிகளை அதிகம் பயன்படுத்தி கதைக்கும் அது நிகழும் காலத்துக்கும் பொருத்தமான பின்னணி இசையையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஆயுதங்கள், வாகனங்கள் தொடங்கி குடிசைகள் வரை டி.ராமலிங்கத்தின் கலை இயக்கமும், தூரக் காட்சிகளின் வழியாக நிலவெளிகளின் பிரம்மாண்டத்துக்குள் அழைத்துச் செல்லும் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு தரும் காட்சி அனுபவமும் மில்லருக்கு மேலும் வலிமை கூட்டியிருக்கின்றன.

கதைக் களம் முன்வைக்கும் சமூக விடுதலைக்கான தன்னெழுச்சி, காலனியக் காலகட்டத்தில் முளைத்த போராளிக் குழுக்கள் - பிரிட்டிஷ் ராணுவம் இடையிலான மோதல்கள் ஆகியன, ‘டன்கிரிக்’, ‘சேவிங் பிரைவேட் ரியான்’ போன்ற போர்க்களப் படங்களுக்கு இணையான ‘தயாரிப்பு வடிவமைப்’பை சாத்திய மாக்கியிருக்கின்றன.

அதைத் திறமையான இயக்கம் மூலம் திரை அனுபவமாக மாற்றித் தந்து, இயக்குநர் மீடியம் சினிமா என்பதைக் காட்டிக் கவர்கிறான் இந்த ‘கேப்டன் மில்லர்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x