தேவதாஸி: படம் ஓடாததால் பணத்தை திருப்பிக் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்

தேவதாஸி: படம் ஓடாததால் பணத்தை திருப்பிக் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்
Updated on
1 min read

தமிழ் சினிமா உருவான ஆரம்ப காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்கு முக்கியமானது. அமெரிக்காவைச் சேர்ந்த எல்லீஸ் ஆர்.டங்கன், லண்டனைச் சேர்ந்த மைக்கேல் ஓமலோவ் (நவயுகன் 1936), இத்தாலியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான டி.மார்க்கோனி, (விமோசனம் 1939), வாசனின் ஜெமினி ஸ்டூடியோவில் மானேஜராக இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியன் ஜே.மொய்லன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதே போல பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றிய பங்கும் அதிகம். அதில் ஒருவர் மாணிக் லால் டாண்டன்!

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் திரை தொழில்நுட்பம் பயின்ற இவர்தான், தன்னுடன் படித்த எல்லீஸ் ஆர் டங்கனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்த மாணிக் லால் டாண்டன், தமிழில் பக்த நந்தனார் (1935), பாமா விஜயம் (1934) உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். அதில் டி.வி.சுந்தரத்துடன் இணைந்து இவர் இயக்கிய படம் ‘தேவதாஸி’. பி.எஸ்.ராமையா இதன் திரைக்கதை, வசனத்தை எழுதினார்.

சுகுமார் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் கண்ணன், லீலா, பாலசுப்பிரமணியம், கே.எஸ்.அங்கமுத்து, என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.துரைராஜ், டி.ஏ.மதுரம் நடித்தனர். பிரெஞ்ச் மொழியில் வெளியான ‘தைஸ்'(Thais) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்துக்கு பி.எஸ்.ராய் ஒளிப்பதிவு செய்தார்.ஏழைப் பெண்ணாக இருந்து தேவதாஸியாகும் நாயகி பற்றிய கதை இது. கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

உடுமலை நாராயண கவி மற்றும் பாபநாசம் ராஜகோபால ஐயர் பாடல்களை எழுதினர். கே.வி.மகாதேவன், சுந்தரி தம்பி குரலில், ‘இது போல் ஆனந்தமே’, சுந்தரி தம்பி பாடிய ‘புது மலரே...’ உட்பட சில பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

நெப்டியூன் ஸ்டூடியோவில் (இப்போதைய எம்.ஜி.ஆர் -ஜானகி கல்லூரி), இதன் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த போதும் பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாக 3 வருடம் ஆகிவிட்டது.

படத்தை முடித்த பின் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சிகளை தனி டிராக்காக சேர்த்தனர். படம் வெளியானதும் இந்தப் படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் மனைவி மதுரத்துடன் சென்று சென்னை பாரகன் தியேட்டரில் பார்க்கச் சென்றாராம். கூட்டமே இல்லாததால், வீட்டுக்குத் திரும்பியவர், தயாரிப்பாளரை அழைத்து, "நான் நடித்தும் படம் சரியாக ஓடவில்லை. இது என் தவறுதான், நீங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கொடுத்ததாகச் சொல்வார்கள். 1948-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பேசப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in