

சென்னை: நடிகர் கார்த்தியின், ‘உழவன் ஃபவுன்டேஷன்’, விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு பங்களிப்பவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் உழவர் விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், ரோகினி, தம்பி ராமையா, பசுபதி, கீர்த்தி பாண்டியன் கலந்து கொண்டனர்.
விழாவில், உழவர்கள் மேம்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மதுரை, திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ், பெண் விவசாயிகள் பற்றி எழுதி வரும் அபர்ணா கார்த்திகேயன், பழங்குடி சமூகப் பெண் ராஜலட்சுமி, நீர் நிலைகளைச் சீரமைக்க பங்காற்றி வரும் சித்ரவேல் ஆகியோருக்கு விருதும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டன.
விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால் நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அதைத்தான் பொங்கல் நாளாகக் கொண்டாடுகிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்து விடுகிறோம். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்கள் வாழ்வில் சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம்” என்றார்.