“விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடி” - ராகவா லாரன்ஸ் பகிர்வு

“விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடி” - ராகவா லாரன்ஸ் பகிர்வு
Updated on
1 min read

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நிலையில், இந்த அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன் தினம் விஜயகாந்த் அவர்களின் சமாதிக்கு சென்றேன். அங்கிருந்து அவரது வீட்டுக்கும் சென்றோம். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனை காட்டி, ‘தம்பி ஹீரோவாக நடிக்கிறான். நீங்கள்தான் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று விஜயகாந்தின் சகோதரி என்னிடம் சொன்னார். அந்த வார்த்தை என் மனதை ஒரு மாதிரி செய்துவிட்டது. விஜயகாந்த் எத்தனையோ நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளார். நிறைய கெஸ்ட் ரோல் செய்துள்ளார்.

எனவே அவ்வளவு உதவி செய்த மனிதரின் குடும்பத்துக்கு நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. சண்முகபாண்டியன் படம் ரிலீசாகும்போது அந்த படத்துக்கு ஒரு நல்ல ஓபனிங் கொடுக்க வேண்டும். அதனை பிரபலப்படுத்த வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யலாம் என்று இருக்கிறேன். அதுமட்டுமின்றி, படக்குழு ஒப்புக் கொண்டால், அந்த படத்தில் நானும் ஒரு கேமியோ ரோல் - அது சண்டைக்காட்சியோ, பாடலோ - செய்யலாம் என்று இருக்கிறேன்.

சண்முகபாண்டியனும் நானும் சேர்ந்து நடிப்பது போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் அவருடன் இணைந்து நடிக்கிறேன். அரசியலில் இருக்கும் விஜய பிரபாகரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்” இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in