

சென்னை: நடிகை நயன்தாராவின் 75-வது திரைப் படம், ‘அன்னபூரணி’. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிச. 1-ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த,சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், இந்தப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவதுபோலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம்வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.