

'கலகலப்பு 2' படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
டிசம்பரில் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் 'கலகலப்பு 2' படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்து வந்தார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டது படக்குழு.
ஆனால், பல்வேறு படங்கள் வெளியானதால் பொறுமை காத்தது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே முடிவடைந்ததைத் தொடர்ந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு/ஏ' சான்றிதழ் கிடைக்கவே, பிப்ரவரி 9-ம் தேதி 'கலகலப்பு 2' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. காரைக்குடி, காசி மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. 'கலகலப்பு 2' முடிந்ததைத் தொடர்ந்து 'சங்கமித்ரா' பணிகளைத் தொடங்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.