Published : 07 Dec 2023 05:52 AM
Last Updated : 07 Dec 2023 05:52 AM

அழியாத கோலங்கள்: ஒரே திரையில் பலரின் வாழ்வு

மறக்க முடியாத பல நினைவுகளை, மனதில் பதியம் போட்டு வைத்திருக்கிறது பால்யம். நினைத்து ரசிக்கவும் ரசித்து நினைக்கவுமான ஆனந்தக் குவியல் அது. அப்படியொரு பதின்பருவ அனுபவத்தை, வாழ்வை, திரைக்காட்சியின் வழியே அழியாத கோலமாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலு மகேந்திரா. ‘அழியாத கோலங்கள்’ என்ற அந்த ‘கம்மிங் ஏஜ்’ படம், ஒரே திரையில் காட்டப்பட்ட பலரின் வாழ்வாக இருந்தது.

தனது அறிமுக படமான ‘கோகிலா’வை கன்னடத்தில் இயக்கிய பாலு மகேந்திரா, தமிழில் இயக்கிய முதல் படம், ‘அழியாத கோலங்கள்’. இந்தப் படத்தை அவர் தொடங்கும்போது இயக்குநர் மகேந்திரன், தனது ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யக் கேட்டதால், ‘அழியாத கோலங்களை’ தள்ளி வைத்துவிட்டு, ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதை முடித்துவிட்டு ‘அழியாத கோலங்கள்’ படத்தைத் தொடங்கினார்.

இது, ராபர்ட் முல்லிகன் இயக்கிய ‘சம்மர் ஆப் 42’ என்ற ஹாலிவுட் பட பாதிப்பில் உருவான படம். கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அவரிடமிருந்துதான் கதைத் தொடங்கும். ஆனால், டைட்டிலில் பெயர் வராது. பிரதாப் போத்தன், ஷோபா, வெண்ணிற ஆடை மூர்த்தி, இந்திரா தேவி, நட்ராஜ், மனோகர், ஷ்யாம் சுந்தர் உட்பட பலர் நடித்தனர். பிரதாப் போத்தனுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். வெண்ணிற ஆடை மூர்த்தி சபல புத்திக்காரராக நடித்திருப்பார். ஷோபா, ஸ்கூல் டீச்சர். பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று சிறுவர்களைப் பற்றிய கதைதான் என்றாலும் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் படம் பார்த்தவர்கள், தங்கள் பிளாஷ்பேக்-களில் மூழ்கிக் கிடந்தார்கள்.

இந்தப் படத்துக்கு சலீல் சவுத்ரி இசை அமைத்தார். இந்தி, பெங்காலி, மலையாளம் உட்பட பல மொழி படங்களுக்கு இசை அமைத்துள்ள சலீல் சவுத்ரியின் இசைக்குழுவில் இளையராஜா, கித்தார், காம்போ ஆர்கன் வாசிப்பவராக இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் தந்தை ஆர்.கே.சேகரும் இவர் குழுவில் பணியாற்றி இருக்கிறார். மலையாள சினிமாவின் அடையாளமாக இருக்கும் ‘செம்மீன்’ படத்துக்கு இசை அமைத்தவரும் இவர் தான். தமிழில் விஜயகாந்தின் 'தூரத்து இடிமுழக்கம்' படத்துக்கும் இவர் இசை அமைத்துள்ளார்.

பாலுமகேந்திராவின் ‘கோகிலா’வில் பணியாற்றியதால் இதிலும் சலீல் சவுத்ரியையே இசை அமைக்க வைத்தார் பாலு மகேந்திரா. கங்கை அமரன் பாடல்கள் எழுதினார். ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடிய ‘பூ வண்ணம் போல நெஞ்சம்’ பாடல் சூப்பர் ஹிட்டானது. படம் வெளியான காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடலாக இது இருந்தது. இந்தப் படத்தின் கேமரா, மற்ற படங்களில் இருந்து வேறு பட்டிருப்பதாக அப்போது பாராட்டப்பட்டன.

1979-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தை சென்னை தேவி திரையரங்க உரிமையாளர்கள், தேவி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தனர். அப்போது இதன் பட்ஜெட் ரூ.8 லட்சம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x