Published : 29 Nov 2023 07:06 AM
Last Updated : 29 Nov 2023 07:06 AM

ராஜ விக்கிரமா: மனைவி நடித்த காட்சிகளை நீக்கிய ஹீரோ!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் சகோதரர் கெம்பராஜ் அர்ஸ். மைசூர் அரசக் குடும்பத்து உறவினரான இவர், தமிழ், கன்னடத்தில் பல திரைப்படங்களைத் தயாரித்து இயக்கி இருக்கிறார். நடிகர் ராஜ்குமார் வருவதற்கு முன் கன்னட திரைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

சென்னை மயிலாப்பூரில் வசித்த இவர், தமிழில் கற்கோட்டை, அழகர்மலை கள்வன், தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் ‘நளதமயந்தி’ உட்பட பல படங்களைத் தயாரித்து இயக்கி, நடித்திருக்கிறார். அப்படி அவர் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று ‘ராஜ விக்கிரமா’.

ஆங்கில இலக்கியம் முடித்திருந்த கெம்பராஜ், அந்தக் காலத்திலேயே தனது வகுப்பு தோழி லலிதாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தப் படத்தில் எம்.வி.ராஜம்மா, பி.ஜெயம்மா உட்பட மூன்று நாயகிகள். ஒரு நாயகியாக லலிதாவை நடிக்க வைத்தார் கெம்பராஜ். ஆயிரம் அடி படமாக்கப்பட்ட நிலையில் அவர் குரல் சரியாக இல்லை என்று விநியோகஸ்தர்கள் கூறியதால், அவரை நீக்கிவிட்டு பண்டரிபாயை நடிக்க வைத்தார். விநியோகஸ்தர்கள் சொன்னதற்காக மனைவியையே படத்தில் இருந்து நீக்கியதை அப்போது செய்தியாகப் பேசிக்கொண்டார்கள். என்.எஸ்.சுப்பையா, ஸ்டன்ட் சோமு, சி.வி.வி.பந்துலு, அங்கமுத்து, மணி ஐயர் உட்பட பலர் நடித்தனர்.

சனி பகவானின் அதிருப்திக்கு ஆளான மன்னன் கெம்பராஜ், வாழ்க்கையில் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். திருட்டுப்பழி காரணமாகத் தனது கால்களை இழக்கிறார். ஒரு கட்டத்தில் சனியுடன் மோத முடியாது என்பதை உணர்ந்து அவரை பிரார்த்தனை செய்கிறார். சனி அதை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது படம்.

பிரபல ஸ்டன்ட் இயக்குநரும் நடிகருமான ஸ்டன்ட் சோமு, தளபதியாக, வில்லன் வேடத்தில் நடித்தார். ராஜம் அய்யர் இசை அமைத்திருந்தார். இவர் வீணை எஸ்.பாலச்சந்தரின் சகோதரர். சிதம்பரம் ஏ.எம். நடராஜ கவி பாடல்கள் எழுதினார். காந்திமதி, ஜிக்கி, ராஜம் அய்யர் பின்னணி பாடினர்.

‘வரப்போற மாப்பிள்ளை முறுக்குவான் மீசைய’, ‘பாழும் அடுப்பை ஊதி ஊதி பக்கமெல்லாம் நோவுது’, ‘நாதோ பாசனையே’, ‘காட்டு வழி', ‘லாலியைப் பாடுவேன்’ உட்பட பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இதில், ‘வரப்போற மாப்பிள்ளை முறுக்குவான் மீசைய’ பாடல் ஹிட்டானது. இந்த ட்யூனை, ‘படி பேஹ்ன்’ என்ற இந்திப் படத்தில் இருந்து அப்படியே கையாண்டிருந்தார்கள். இதே ட்யூன், ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் வரும் ‘எண்ணி எண்ணிப் பார்க்க மனம்’ பாடலிலும் பயன்படுத்தப்பட்டது.

ஏ.ராமையா என்பவரால் கோடம்பாக்கத்தில் உருவாக்கப்பட்ட முதல் ஸ்டூடியோவான ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டூடியோவில் இந்தப் படம் உருவானது.

1950ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம், தமிழில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கன்னடத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றி, தமிழ், கன்னடத்தில் மற்றொரு படத்தை உருவாக்க அவரைத் தூண்டியது. அந்தப் படம் ‘கற்கோட்டை’. இதில் கிருஷ்ணகுமாரி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாய் சந்தியா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x