

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்:டிக்:டிக்' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும், ஜனவரி 26-ம் தேதி படம் வெளியாகாது என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தெரிவித்துள்ளார்.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிக்:டிக்:டிக்'. இதில் ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இது தமிழ்த் திரையில், முழுக்க விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை ஜபக் தயாரித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.
ஜனவரி 26-ம் தேதி வெளியீடாக 'டிக்:டிக்:டிக்' திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜனவரி 26-ம் தேதி படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிச்சுமை காரணமாக 'டிக்:டிக்:டிக்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தெரிவித்துள்ளார்.