Published : 22 Nov 2023 10:19 PM
Last Updated : 22 Nov 2023 10:19 PM

விஜய் சேதுபதி பேச்சு முதல் மணிப்பூர் சினிமா வரை - கோவா சர்வதேச திரைப்பட விழா ஹைலைட்ஸ்

கோவா: 54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழா டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்வின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இந்த விழாவில் மாதுரி தீக்சித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், நுஷ்ரத் பரூச்சா, பங்கஜ் திரிபாதி, சாந்தனு மொய்த்ரா, ஸ்ரேயா கோஷல் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர். மேலும் இந்நிகழ்வில் சல்மான் கான், வித்யா பாலன், ஆயுஷ்மான் குரானா, அனுபம் கெர், விக்கி கவுஷல், சித்தார்த் மல்ஹோத்ரா, அதிதி ராவ் ஹைதாரி, ஏ.ஆர்.ரஹ்மான், அமித் திரிவேதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த சினிமாக்கள் திரையிடப்படுகின்றன.

விஎஃப்எக்ஸ் அரங்கு: சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக விஎஃப்எக்ஸ் மற்றும் தொழில்நுட்ப அரங்கை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நேற்று (நவ.21) திறந்துவைத்தார். இது தவிர, சினி மியூசியம், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றின் காட்சி அரங்குகளையும் திறந்துவைத்த அமைச்சர், இயக்குநர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “இந்தியா போஸ்ட் புரொடக்ஷனின் மையமாக உள்ளது. புதிதாக நிறுவப்பட்ட விஎஃப்எக்ஸ், தொழில்நுட்ப அரங்கு ஆகியவை திரைப்படத் தயாரிப்பில் போஸ்ட் புரொடக்ஷனை மேலும் அதிகரிக்கும். இந்தியா விரைவில் உலகின் 3-வது பெரிய ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பனோரமா பிரிவு திரைப்படம்: இந்திய பனோரமா பிரிவில் ‘ஆட்டம்’ மலையாளத் திரைப்படம் முதல் படமாக திரையிடப்பட்டது. ஆனந்த் எகர்ஷி இப்படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய இயக்குநர், “இந்தப் படத்தின் மையக்கரு ஆணாதிக்கம் சார்ந்தது அல்ல. இது தனிநபருக்கும் குழுவிற்கும் இடையிலான செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டது” என்றார். படத்தில் வினய் ஃபோர்ட், ஜரின் ஷிஹாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி: “படத்தில் நடிகர்களை விட கதை மற்றும் கதாபாத்திரங்களால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். நடிப்புக்கு எந்த சூத்திரமும் இல்லை. சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைந்து முழுமையாக அதில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தேசிய விருது பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசிய சேதுபதி, திருநங்கைகள் எதிர்கொள்ளும் நிஜ வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்க முயற்சித்ததாக குறிப்பிட்டார்.வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது குறித்து சேதுபதியிடம் கேட்டபோது, குறிப்பிட்ட வேடங்களில் மட்டும் நடிப்பதைத் தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தார்.

காந்தி டாக்ஸ்: விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் பிளாக் காமெடியை அடிப்படையாகக் கொண்ட உருவாக்கப்பட்டது. மவுன படமான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதல் மவுன மொழித் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் திரைப்படம்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள ஆண்ட்ரோ என்ற குக்கிராமத்தில் கைத்தறி மற்றும் கைவினை நெசவுக் கடை நடத்தி வருபவர் 60 வயதான லாய்பி பான்ஜூபம். லாய்பி பான்ஜூபம் சாதாரணப் பெண் அல்ல. அவர் தனது பண்டைய கிராமத்தில் வேரூன்றிய ஆணாதிக்கம், பொருளாதார சிரமங்கள் மற்றும் பழமைவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டே அனைத்து மகளிர் கால்பந்து கிளப்பை நடத்தி வருகிறார். சிறிய பத்திரிகையில் வெளியான இந்தக் கட்டுரையை படமாக்கியிருக்கிறார் தேசிய விருது பெற்ற இயக்குநர் மீனா லாங்ஜாமின். ‘ஆண்ட்ரோ ட்ரீம்ஸ்’ என்ற இப்படம் நான் ஃபீச்சர் பிலிம் பிரிவில் திரையிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x