

சென்னை: ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடிக்கிறார். ஜெய், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகிய மூன்று பேரும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. தமன் இசை அமைத்துள்ள இந்தப் படம் டிச.1ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் படம் பற்றி படக்குழு கூறும்போது, “இதில் நயன்தாரா செஃபாக நடித்துள்ளார். இதற்காக பல சமையல் நுணுக்கங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு இந்தப் படத்தில் நடித்தார். காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக, சமையல் காட்சிகளின் போது, சில சமையல் கலைஞர்களை செட்டில் வைத்திருந்தோம்” என்று தெரிவித்துள்ளது.