

ஹாலிவுட் படமான ‘த பேரண்ட் ட்ராப்’ படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம், ‘குழந்தையும் தெய்வமும்’.
பெங்களூரில் ‘த பேரண்ட் ட்ராப்’ படத்தைப் பார்த்த ஏவி.எம் செட்டியார், தன் மகன் குமரனிடம் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு கருத்துக் கேட்டார். கொஞ்சம் மாற்றி நம் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தமிழில் உருவாக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்றார் அவர். உடனடியாக ஜாவர் சீதாராமனை அழைத்து அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் படம் பார்த்துவிட்டு, பதிலை நாளைக்குச் சொல்கிறேன் என்று கூறிவிட்டார்.
விமானத்தில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஜாவரை எதேச்சையாக சந்தித்தார் நடிகை ஜி.வரலட்சுமி. இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, தங்கள் படத்தில் வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என்று கேட்க, அவரை வில்லியாக்கும் எண்ணம் அங்கே தோன்றியது ஜாவருக்கு. மறுநாள் ‘குழந்தையும் தெய்வமும்’ கதையை உருவாக்கி விட்டார் ஜாவர்.
தனியார் போக்குவரத்து நிறுவனத்தின் முதலாளி ஜி.வரலட்சுமி. பணக்கார, ஆணவம் கொண்ட அவரின் ஒரே மகள் ஜமுனாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார் ஜெய்சங்கர். இரண்டு பெண் குழந்தைகள். வீட்டோடு மாப்பிள்ளையான ஜெய்சங்கரை, அவ்வப்போது அவமானப்படுத்துகிறார் மாமியார் வரலட்சுமி. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஜெய்சங்கர். அம்மாவையும் அப்பாவையும் மகள்கள் ஒன்று சேர்க்கும் கதைதான் படம்.
ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த ஜெய்சங்கர் இதில் சென்டிமென்ட்டாக நடித்தார். ஜமுனா நாயகி. குட்டி பத்மினி, நாகேஷ் உட்பட பலர் நடித்தனர். வெற்றிகரமான இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். கண்ணதாசனும் வாலியும் பாடல்கள் எழுதினர். குட்டி பத்மினிக்கு இரட்டை வேடம்.
எம்.எஸ்.வி இசையில் ‘கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே’, ‘பழமுதிர் சோலையிலே’, ‘அன்புள்ள மான் விழியே’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘என்ன வேகம் சொல்லு பாமா’, ‘ஆஹா இது நள்ளிரவு’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
வெற்றிபெற்ற இந்தப் படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இதே படத்தைத் தெலுங்கில் ‘லேத மனசுலு’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ஜெய்சங்கருக்கு பதில் ஹராநாத் நடித்தார். படம் ஹிட். இந்தியில் ‘தோ கலியான்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் பிஸ்வஜித், மாலா சின்ஹா நடித்தனர். இந்த இரண்டு ரீமேக்கையும் கிருஷ்ணன் -பஞ்சுவே இயக்கினர்.
1965ம் ஆண்டு இதே தேதியில்தான் இந்தப் படம் வெளியானது.