

திராவிட கருத்துகளைத் திரைப்படங்களில் பேசத் தொடங்கிய காலத்தில் கம்யூனிசக் கருத்துகளைத் திரையில் சொல்ல வந்த திரைப்படம், ‘பாதை தெரியுது பார்’. இதை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ். ‘சின்னமுல்’என்ற வங்க மொழி படத்தை இயக்கிய இவர், பின்னர் சென்னை வந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
‘மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டி’யை தொடங்கியவர்களுள் ஒருவர். இவரும் மிகச்சிறந்த இசைமேதையும் மார்க்சியவாதியுமான எம்.பி.சீனிவாசனும் இணைந்து குமரி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத்தொடங்கினர். எம்.பி.சீனிவாசன்,மலையாளத்தில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்திருப்பவர். பாடகர் கே.ஜே.ஜேசுதாஸைதிரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
பொதுமக்களிடம் நிதி திரட்டி ‘பாதை தெரியுது பார்’ படத்தைத் தயாரித்தனர். ‘கிரவுட் பண்டி’ல் உருவான முதல் திரைப்படம் இது.
கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் உருவாக்கிய இந்தப்படத்தை ப.ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்.
பெரும் தொழில்நகராக மாறியகோவையில் அங்குள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டையும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் பேசியது இந்தப்படம். முதலாளிகளுக்கு எதிரான இந்தப் படம் அதிக வட்டி, கள்ளச்சந்தை, பணவீக்கம் போன்ற விஷயங்களையும் காரசாரமாகவே பேசியது.
திருச்சி பொன்மலையில் ரயில்வேஊழியராகப் பணியாற்றிய கே.விஜயன் ஹீரோவாக நடித்தார். பிறகு சுமார் 250 படங்களில் நடித்துள்ள இவர், 68 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் மகன்தான் இயக்குநர் சுந்தர்.கே.விஜயன்.
விஜயன் ஜோடியாக எல்.விஜயலட்சுமி நடித்தார். நடனக்கலைஞரான இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி ஆகியோருடன் பலபடங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் ‘குடியிருந்த கோயில்’ படத்தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’என்ற பாடலுக்கு ஆடியவர் இவர்.
எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா, வி.கோபாலகிருஷ்ணன், முத்துராமன், சுந்தரிபாய், எஸ்.ஆர்.ஜானகி உட்பட பலர் நடித்திருந்தனர்.திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர்.கே. கண்ணன் எழுதினார்.எம்.பி.சீனிவாசன் இசை அமைத்தார். பாடல்களை பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், கே.சி.எஸ். அருணாச்சலம், ஜெயகாந்தன் எழுதினார்கள். ஜெயகாந்தன் வரிகளில்,‘அழுத கண்ணீரும் பாலாகுமா?’,‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘உண்மை ஒரு நாள் வெளியாகும் அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்’, கே.சி.எஸ்.அருணாச்சலத்தின் ‘சின்ன சின்ன மூக்குத்தியாம்’, ‘ராசா மக போலிருந்தே’ ஆகியபாடல்கள் வரவேற்பைப் பெற்றன.இதில் ‘சின்ன சின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்’,‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’அப்போது மெகா ஹிட் பாடல்கள். வானொலியில் தினமும் அப்போது இந்தப் பாடல்கள் ஒலிபரப்பாகும்.
இந்தப் படத்துக்காக நண்பர் ஒருவர் உதவியுடன் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு வந்தார் கவிஞர் வாலி.அப்போது, ‘ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை, கே.சி.எஸ். அருணாச்சலம் ஆகியோர்தான் எழுதுகிறார்கள். பொதுவுடமை கருத்தைச் சொல்லும் பாடல் இருந்தால், ‘டைட்டிலி’ல் சேர்க்கிறேன்’ என்றார் எம்.பி.சீனிவாசன். கொடுத்தார், வாலி.ஆனால், பெரிதாக கவரவில்லைஎன்று நிராகரிக்கப்பட்டது. அந்தப் பாடல்தான், பின்பு எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’ படத்தில் இடம்பெற்ற, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காகக் கொடுத்தான்’!
இந்தப் படம் வணிக ரீதியாகவெற்றிபெறவில்லை. முதலாளித்துவ போக்குக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்தப் படத்தை, தியேட்டர் முதலாளிகள் தியேட்டர் கொடுக்காமல் தோற்கடித்து விட்டதாகஅப்போது விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும் சிறந்த தமிழ்ப் படத்துக்கானகுடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது.
1960-ம் ஆண்டு இதே தேதியில் இந்தப் படம் வெளியானது.
‘‘இந்தப் படத்துக்காக வாலி எழுதி நிராகரிக்கப்பட்ட அந்தப் பாடல்தான், பின்பு எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’படத்தில் இடம்பெற்ற, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காகக் கொடுத்தான்’!”