

ஹைதராபாத்: ‘இதுதான்டா போலீஸ்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் டாக்டர் ராஜசேகர். அதற்கு முன் தமிழில், புதுமைப் பெண், புதிய தீர்ப்பு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர், இப்போது முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். நிதின் ஹீரோவாக நடிக்கும் ‘எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன்’ படத்தில் ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சம்பத் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வக்காந்தம் வம்சி இயக்கியுள்ளார். இதில் டாக்டர் ராஜசேகர் வில்லனாக நடித்தது ஏன் என்று அவர் மகளும் நடிகையுமான ஷிவானி தெரிவித்துள்ளார்.
“என் தந்தைக்கு, வில்லனாக நடிக்க எப்போதும் ஆசை உண்டு. அதற்காக அவர் சில கதைகளைக் கேட்டார். அவர் நடிப்பை வெளிப்படுத்துவது போன்ற சிறந்த கேரக்டர் கிடைக்கவில்லை. விஜய் சேதுபதியும் அரவிந்த்சாமியும் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களையே அவரும் விரும்பினார். நிதின் படத்தில் அந்த வேடம் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டார். அந்த பாத்திரம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்” என்று தெரிவித்துள்ளார்.