அல்போன்ஸ் அனுப்பிய பாடலும்... கமலின் பதிலும்: பார்த்திபன் பகிர்ந்த வாய்ஸ் மெசேஜ்

அல்போன்ஸ் அனுப்பிய பாடலும்... கமலின் பதிலும்: பார்த்திபன் பகிர்ந்த வாய்ஸ் மெசேஜ்
Updated on
1 min read

சென்னை: கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அல்போன்ஸ் உருவாக்கிய பாடலுக்கு கமல் அனுப்பிய பதில் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பதை கண்டறிந்ததால், திரையுலகில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின்னர் அதனை நீக்கினார். இது தொடர்பாக பின்னர் எந்த விளக்கமும் அவர் அளிக்கவில்லை.

இந்த நிலையில், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்திரன், தான் எழுதி உருவாக்கிய ஒரு பாடலை நடிகர் பார்த்திபன் மூலம் கமலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை கேட்ட கமல், அல்போன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரை உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய வாய்ஸ் மெசேஜை பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

“பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும், என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான். கேட்கும் மாத்திரத்தில் புரியாது. புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன். அதன் பின் அருள்பாலிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை. ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குநர் அல்போன்ற் புத்திரன், கமல் சார் பிறந்தநாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி “எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன். நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?” என்று கேட்டார். அவருக்குதவ கமல் சாரை அணுகினேன். அதற்களித்த பதிலது.

வரிசை கட்டிக்கொண்டு படங்கள், சொந்தபட வேளைகள், பிக் பாஸ், அரசியல் பணிகள் என இப்படி அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை (நேற்றானதால்) மனப்பூர்வமாக பகிர்ந்தேன். அதை கேட்டு பெட்டி பெட்டியாக இயக்குநர் எனக்கு நன்றி அனுப்பினார். உடல்நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது” இவ்வாறு பார்த்திபன் அப்பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in