போலி அந்தஸ்து பிரச்சினையை சொன்ன ’மறுமலர்ச்சி’!

போலி அந்தஸ்து பிரச்சினையை சொன்ன ’மறுமலர்ச்சி’!
Updated on
1 min read

தமிழில், அவன் ஒரு சரித்திரம், ஹரிசந்திரா, கருடா சௌக்கியமா? வசந்த மாளிகை உட்பட சில படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் தமிழ், தெலுங்கில் இயக்கிய படம், ‘மறுமலர்ச்சி’. தமிழில் ஸ்ரீராம் கதாநாயகனாக நடித்தார். இவர் 1950-60 களில் பல படங்களில் நடித்திருக்கிறார். ‘கலாவதி’, ‘மூன்று பிள்ளைகள்’, எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்’, ஜெய்சங்கரின் ‘வல்லவன் ஒருவன்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மறுமலர்ச்சியில் நாயகியாக நடித்தவர், ஜி.வரலக்ஷ்மி. எம்.என்.நம்பியார், ஈ.வி.சரோஜா உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். தெலுங்கில் நம்பியார், ஈ.வி.சரோஜாவுக்குப் பதில் சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயலு, ஜமுனா நடித்தனர். ஆனந்தா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சி.வி.ரெட்டி தயாரித்த இந்தப் படத்துக்கு எஸ்.ஏ.சுப்புராமன், திரைக்கதை, வசனம் எழுதினார்.

போலி அந்தஸ்து மற்றும் ஆடம்பர வாழ்வினால் ஏற்படும் பிரச்சினையைச் சொல்லும் கதைதான் படம். தெலுங்கில் ‘மேலுக் கொலுப்பு’ என்ற பெயரில் இந்தப் படம் உருவானது. பெண்டியாலா நாகேஸ்வர ராவ் இசை அமைத்தார். பாடல்களை எம்.எஸ்.சுப்பிரமணியம் எழுதினார்.

ஏ.எம். ராஜா, ஜிக்கி குரலில், ‘மாலையிதே நல்ல வேளையிதே’, டி.எம்.எஸ் குரலில், ‘வான வீதி தனில் ஆதவன் உதிக்கின்றான்’, ஜிக்கி குரலில், ‘மானமறியாத பேரானந்தம் ஏனோ குதூகலமே ', ஏ.எம்.ராஜா, பி.லீலா பாடிய ’நானும் ஒரு மனிதனா எனதும் ஒரு இதயமா ' பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. தெலுங்கில் 1956ம் ஆண்டு அக்டோபரில் வெளியான இந்தப் படம் தமிழில் இதே நாளில் வெளியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in