

சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரி யாக ஒளிப்பதிவாளர் ரவி. கே. சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’, 'கன்னத்தில் முத்தமிட்டால்', ‘பாய்ஸ்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், ரவி.கே. சந்திரன். இந்தியில் ‘கஜினி’, 'பிளாக்', 'மை நேம் இஸ் கான்' உட்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இப்போது, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக் லைஃப்' படத்துக்குப் பணியாற்றுகிறார்.
இவர், சர்வதேச புகழ் பெற்ற எனர்காகேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார். போலந்தில் உள்ள டோரன் நகரில் இவ்விழா வரும் 11ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தையும் எனர்கா கேமரிமேஜ் விழாவில் ரவி கே சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துவார்.