

இந்த தீபாவளிக்கு தமிழில் நட்சத்திர நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்கள் வெளியாகின. இதில் ‘சர்தார்’ ரூ.100 கோடி வசூலை ஈட்டி தீபாவளி ரேஸில் முதலிடம் பிடித்தது. அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்தி உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அது குறித்து பார்ப்போம்.
ஜப்பான்: ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜப்பான் என்ற கொள்ளையன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். முன்னதாக அவர் ‘சிறுத்தை’ படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது ‘ஜிகர்தண்டா’. இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். பீரியட் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.
கிடா: ரா.வெங்கட் இயக்கத்தில் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கிடா’. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்ற இப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்துக்கு தீசன் இசையமைத்துள்ளார். மனிதத்தை பேசும் இப்படைப்பு இந்த தீபாவளிக்கு தவறவிடக்கூடாத படங்களில் ஒன்று.
ரெய்டு: எஸ்.பி.கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரெய்டு’. படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் வசனங்களை இயக்குநர் முத்தையா எழுதியுள்ளார். விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
டைகர் 3: யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான்கான் நடித்துள்ள படம் ‘டைகர் 3’. ‘வார்’, ‘பதான்’ படங்களைத் தொடர்ந்து ‘யூஆர்எஃப் ஸ்பை யூனிவர்ஸூக்குள்’ (YRF Spy Universe) வரும் இப்படத்தை மணீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா கதை எழுதியுள்ளார். சல்மான்கான், தவிர்த்து, கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி, ரித்தி டோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரிதம் இசையைமத்துள்ளார். படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்பா (PIPPA): ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் இஷான் கட்டார், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தி படம் ‘பிப்பா’ (PIPPA). ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் குதிரைப்படை படைப்பிரிவின் கேப்டன் பல்ராம் சிங் மேத்தாவின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தி மார்வல்ஸ்: மார்வல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது ‘தி மார்வல்ஸ்’. நியா டகோஸ்டா இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லாரா கார்ப்மேன் இசையமைத்துள்ளார். மார்வல்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.