

நான் யாரையும் கல்யாணம் பண்ணவில்லை என்று இன்று காலை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை அஞ்சலி தெரிவித்தார்.
சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, அஞ்சலி இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. 'சேட்டை' படத்திற்கு பிறகு அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கும் படம் இது தான். அஞ்சலி மட்டுமே இப்படத்திற்கு நாயகி அல்ல, இன்னொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
தமன் இசையமைத்து வரும் இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.
இன்று காலை நடைபெற்ற இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஞ்சலி பேசியது, " பல மாதங்களுக்கு பிறகு தமிழில் இப்படத்தில் நடிக்க இருக்கிறேன். சுராஜ் சார் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. எனக்கு ஒரு நல்ல ரீ-எண்ட்ரியாக இப்படம் இருக்கும். இது முழு நீள காமெடி படம். முதல் முறையாக முழு நீள காமெடி ரோலில் நடிக்கிறேன்.
எனக்கு தமிழ் திரையுலகில் நடிக்க யாரும் தடை போடவில்லை. தடை போட்டிருந்தால், எப்படி இந்த படத்தில் நடிக்க முடியும்.
நான் யாரையும் கல்யாணம் பண்ணவில்லை. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. எப்போது எனக்கு கல்யாணமானது என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு நண்பர்கள், சினிமா துறையினர் பலர் துணையாக இருக்கின்றனர். தமிழில் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
களஞ்சியம் இயக்கும் படம் குறித்து இப்போது நான் எதுவுமே பேச முடியாது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.” என்றார்.